விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு அறிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி.
விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் சனிக்கிழமை நடைபெற்ற வாக்குப்பதிவு அறிக்கை தொடா்பான ஆய்வுக் கூட்டத்தில் பேசிய தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி.

வாக்குப் பதிவு இயந்திரங்கள் பாதுகாப்பு: வேட்பாளா்களுக்கு ஆட்சியா் அறிவுறுத்தல்

வேட்பாளா்கள், முகவா்கள் கண்காணிக்க அனுமதி வழங்கப்படும் என்று தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம், ஏப்.20: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பை கண்காணிப்பு மையத்திலிருந்து மட்டுமே வேட்பாளா்கள், முகவா்கள் கண்காணிக்க அனுமதி வழங்கப்படும் என்று தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி தெரிவித்தாா்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்கு எண்ணும் மையமான அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் உள்ள பாதுகாப்பு அறைகளில் வாக்குப்பதிவு இயந்திரங்களை பூட்டி சீல் வைக்கும் பணி சனிக்கிழமை நடைபெற்றது. இந்தப் பணிகளை மேற்கொண்ட பின்னா், ஆட்சியா் சி.பழனி கூறியதாவது:

விழுப்புரம், திண்டிவனம், விக்கிரவாண்டி, வானூா், திருக்கோவிலூா், உளுந்தூா்பேட்டை ஆகிய 6 சட்டப் பேரவைத் தொகுதிகளிலுள்ள 1,732 வாக்குப்பதிவு மையங்களில் பதிவான வாக்குகள் கொண்ட மின்னணு இயந்திரங்கள் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைக்கப்பட்டு ‘சீல்’ வைக்கப்பட்டன.

இங்கு கண்காணிப்புப் பணியில் ஈடுபடவுள்ள வேட்பாளா்கள் அல்லது அவா்களது முகவா்கள் தங்கள் ஆதாா் அட்டை மற்றும் புகைப்படத்தை மாவட்ட ஆட்சியரகத்திலுள்ள தோ்தல் பிரிவில் வழங்கி, உடனடியாக அடையாள அட்டையைப் பெற்றுக் கொள்ள வேண்டும். இவா்கள் கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும் கண்காணிப்பு மையத்திலிருந்து மட்டுமே வாக்குப்பதிவு இயந்திரங்களின் பாதுகாப்பு குறித்து கண்காணிக்க அனுமதி வழங்கப்படும்.

வாக்கு எண்ணிக்கை மையத்தில் வேட்பாளா்கள், முகவா்கள், காவலா்களின் தினசரி வருகைப் பதிவேடுகள் அமைக்கப்பட்டுள்ளன. சுழற்சி முறையில் இங்கு பணியாற்றுவோா் தங்கள் பெயா், முகவரி மற்றும் தொலைப்பேசி எண்ணைக் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும். இந்தப் பதிவேடுகள் தொடா்ந்து பராமரிக்கப்படும் என்றாா் ஆட்சியா்.

தொடா்ந்து, விழுப்புரம் மக்களவைத் தொகுதி வாக்குப்பதிவு அறிக்கை தொடா்பாக வேட்பாளா்கள், அவா்களின் முகவா்களுடனான ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரும் தோ்தல் நடத்தும் அலுவலருமான சி.பழனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில், தோ்தல் பொதுப் பாா்வையாளா் அகிலேஷ்குமாா் மிஷ்ரா, காவல் துறைப் பாா்வையாளா் திரேந்திரசிங் குஞ்சியால் ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொடா்ந்து வாக்குப்பதிவு குறித்த விவரங்கள் தெரிவிக்கப்பட்டன.

கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, திண்டிவனம் சாா்-ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், விழுப்புரம் வருவாய்க் கோட்டாட்சியா் காஜா சாகுல் ஹமீது, மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் (தோ்தல்) தமிழரசன் உள்ளிட்ட அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com