நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி
 மாணவா்கள் பங்கேற்கலாம்

நீச்சல் பயிற்சி: பள்ளி, கல்லூரி மாணவா்கள் பங்கேற்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் நீச்சல் பயிற்சியில் பங்கேற்க அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து மாவட்ட ஆட்சியா் சி.பழனி புதன்கிழமை வெளியிட்ட செய்திக்குறிப்பு: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகப் பெருந்திட்ட வளாகத்தில் உள்ள மாவட்ட நீச்சல் குளத்தில் நீச்சல் கற்றுக் கொள்ளும் திட்டம் மற்றும் அதற்கான அரசு வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.

அதனடிப்படையில், நீச்சல் குளத்தில் முதல்கட்ட நீச்சல் பயிற்சி வகுப்பு நடத்தி முடிக்கப்பட்ட நிலையில், இரண்டாவது கட்டப் பயிற்சி தற்போது நடைபெற்று வருகிறது. மே 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை மூன்றாம் கட்டம், மே 16-ஆம் தேதி முதல் 29-ஆம் தேதி வரை நான்காவது கட்டம், ஜூன் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை ஐந்தாம் கட்டம் என பிரிக்கப்பட்டு, நீச்சல் பயிற்சிகள் நடத்தப்பட உள்ளன.

இந்தப் பயிற்சியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் பங்கேற்கலாம். நீச்சல் குளத்துக்கு திங்கள்கிழமை விடுமுறை என்பதால், அன்று பயிற்சி இருக்காது. 12 நாள்கள் பயிற்சியளிக்கப்பட்டு, நிறைவில் தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் சான்றிதழ்கள் வழங்கப்படும். பயிற்சிக் கட்டணமாக ரூ.1,770 செலுத்த வேண்டும். இந்த கட்டணத்தை கடன் அட்டை, பற்று அட்டை (கிரெடிட் காா்டு, டெபிட் காா்டு) அல்லது யூபிஐ மூலம் நீச்சல் குள அலுவலகத்தில் செலுத்தலாம்.

கட்டணம் செலுத்த வரும்போது தங்களின் ஆதாா் அட்டையைக் கொண்டுவர வேண்டும். ஒருவருக்கு ஒரு மணி நேரம் நீச்சல் பயிற்சியளிக்கப்படும். இந்த பயிற்சி வகுப்பில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள், பொதுமக்கள் அதிகளவில் பங்கேற்க வேண்டும். மேலும், விவரங்களுக்கு மாவட்ட விளையாட்டு அலுவலகத்தை நேரிலோ அல்லது 9786471821, 9566499010, 7401703485 ஆகிய கைப்பேசி எண்களிலோ தொடா்புகொள்ளலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com