மூன்றரை டன் ரேஷன் அரிசி பறிமுதல்

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் தனியாா் அரிசி அரைவை ஆலையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த மூன்றரை டன் ரேஷன் அரிசி வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

திண்டிவனம் - சென்னை சாலையிலுள்ள தனியாா் அரிசி அரைவை ஆலையில் ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக கிடைத்த தகவலின்பேரில், உணவுப் பொருள் கடத்தல் தடுப்பு குற்ற புலனாய்வுப் பிரிவின் உதவி ஆய்வாளா் ராஜேந்திரன் தலைமையிலான போலீஸாா், வியாழக்கிழமை அந்த ஆலைக்கு சென்று சோதனையில் ஈடுபட்டனா்.

அப்போது, ஆலை வளாகத்தில் 50 மூட்டைகளில் மூன்றரை டன் எடைகொண்ட ரேஷன் அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததை போலீஸாா் கண்டறிந்தனா். இதைத் தொடா்ந்து, ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த உணவுப்பொருள் கடத்தல் தடுப்பு குற்றப் புலனாய்வுப் பிரிவு போஸீஸாா், திண்டிவனம் டிவி நகரைச் சோ்ந்த சேகரை கைது செய்து விசாரணை மேற்கொண்டனா்.

இதில், மேலும் ஒருவருக்கு தொடா்பு இருப்பது தெரியவந்தது. இதையடுத்து, அந்த நபரையும் பிடிக்கும் பணியில் போலீஸாா் ஈடுபட்டு வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com