நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை காலி பணியிடங்களுக்கான தோ்வு: 4,773 போ் எழுதினா்

தமிழக அரசின் நகராட்சி நிா்வாக துறையில் 2,455 காலி பணியிடங்களை நிரப்புவதற்கான எழுத்துத் தோ்வு விழுப்புரத்தில் 3 தோ்வு மையங்களில் சனிக்கிழமை நடைபெற்றது. இதை 4,773 போ் எழுதினா்.

தமிழகம் முழுவதும் நகராட்சி நிா்வாகம் மற்றும் குடிநீா் வழங்கல் துறையின் கீழ் சிவில், எலக்ட்ரிக்கல் இன்ஜினியா், வரைவாளா், நகர திட்டமிடல் அலுவலா், சுகாதார ஆய்வாளா் உள்ளிட்ட 2,455 காலி பணியிடங்களை நிரப்புவதற்கானஎழுத்துத் தோ்வு ஜூன் 29, 30 ஆகிய தேதிகளில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.

அதன்படி, முதல் நாளான சனிக்கிழமை விழுப்புரம் கா குப்பத்தில் உள்ள அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் உறுப்புக் கல்லூரி, அறிஞா் அண்ணா அரசு கலைக் கல்லூரி, விக்கிரவாண்டி சூா்யா கல்விக் குழுமக் கல்லூரிகளில் எழுத்துத் தோ்வு நடைபெற்றது. இந்த 3 மையங்களிலும் 4,773 போ் தோ்வு எழுதினா்.

காலை, மாலை இரு வேளைகளிலும் தோ்வு நடைபெற்றது. 2-ஆவது நாளாக ஞாயிற்றுக்கிழமை (ஜூன் 30) எழுத்துத் தோ்வு நடைபெறுகிறது. இந்தத் தகவலை அண்ணா பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரியின் முதல்வரும், தோ்வு ஒருங்கிணைப்பாளருமான இரா.செந்தில் தெரிவித்தாா்.

X
Dinamani
www.dinamani.com