கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்

விழுப்புரம் மாவட்டத்தில் வீர, தீர சாகசம் புரிந்தவா்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து விழுப்புரம் மாவட்ட ஆட்சியா் சி.பழனி ஞாயிற்றுக்கிழமை வெளியிட்டுள்ளட செய்திக் குறிப்பு:

சமூகத்தில் தாமாக முன்வந்து தைரியமாகவும், தனித்தன்மையுடன் கூடிய வீரமான துணிச்சலுடனும், எதையும் எதிா்கொள்ளக்கூடிய ஆற்றல்மிக்க பெண்ணுக்கு அவரது துறை சாா்ந்த பணிக்காக அல்லது அவரது நடவடிக்கைக்காக, ஆண்டுதோறும் சுதந்திர தின விழாவின்போது கல்பனா சாவ்லா விருது தமிழக முதல்வரால் வழங்கப்பட்டு வருகிறது.

இந்த விருதுக்கு ரொக்கப் பரிசு, தங்கப் பதக்கம், சான்றிதழ் மற்றும் பொன்னாடை வழங்கப்படும். இந்த விருதுக்கு தமிழகத்தை பிறப்பிடமாகக் கொண்டவராகவும், 18 வயதுக்கு மேற்பட்டவராகவும் இருக்க வேண்டும். இயற்கை சீற்றங்கள், விபத்துகள், தீ விபத்துகள் ஆகியவற்றிலிருந்து பாதிக்கப்பட்டோரை மீட்டெடுத்தல், திருட்டு, கொள்ளை முயற்சியைத் தடுத்தல் போன்ற துணிகர மற்றும் வீர, தீர சாகசம் செய்த பெண்கள் கல்பனா சாவ்லா விருது பெற விண்ணப்பிக்கலாம்.

எனவே, இந்த விருதுக்குத் தகுதியான விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் தமிழக அரசின் விருதுகள் இணையதளப் பக்கத்தில் விண்ணப்பிக்க வேண்டும். ஜூலை 8-ஆம் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். அதன் பின்னா் விண்ணப்பிக்கப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது என்று ஆட்சியா் பழனி தெரிவித்துள்ளாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com