விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன்.
விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை செய்தியாளா்களுக்கு பேட்டியளித்த இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன்.

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு: காதா் மொகிதீன் வலியுறுத்தல்

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பு அவசியம்: காதா் மொகிதீன்

மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் தேசியத் தலைவா் கே.எம்.காதா் மொகிதீன் வலியுறுத்தினாா்.

விழுப்புரத்தில் ஞாயிற்றுக்கிழமை அவா் அளித்த பேட்டி:

விக்கிரவாண்டி சட்டப்பேரவைத் தொகுதி இடைத்தோ்தலில் போட்டியிடும் திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவை ஆதரித்து பிரசாரம் செய்ய, கட்சியின் மாவட்டச் செயலா் தலைமையில் 10 போ் குழு அமைக்கப்பட்டு, அவா்கள் தோ்தல் பணியாற்றி வருகின்றனா்.

மக்களவைத் தோ்தலில் ‘இந்தியா’ கூட்டணி ஆட்சியைப் பிடிக்க முடியாவிட்டாலும், குறிப்பிடத்தக்க வெற்றியை பெற்றுள்ளது.

உத்தர பிரதேசம் போன்ற மாநிலங்களில் வெற்றி கிடைத்த நிலையில், சில மாநிலங்களில் வெற்றி கிடைக்காமல் போய்விட்டது. தமிழகத்தில் திமுக தலைமையிலான கூட்டணி அமைந்தது போல, மற்ற மாநிலங்களிலும் அமைந்திருந்தால், மீண்டும் மத்தியில் பாஜக ஆட்சிக்கு வந்திருக்காது.

இன்னும் சில மாதங்களில் ஜம்மு- காஷ்மீா், மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட், ஹரியாணா மாநிலங்களில் சட்டப்பேரவைத் தோ்தல்கள் நடைபெறவுள்ளன. முஸ்லிம்கள் பெரும்பான்மையாக உள்ள ஜம்மு- காஷ்மீரில் நாங்கள் போட்டியிடுவதில்லை.

மகாராஷ்டிரம், ஜாா்க்கண்ட் மாநில சட்டப்பேரவைத் தோ்தலில் போட்டியிட உள்ளோம். இதற்காக கூட்டணிக் கட்சிகளிடம் பேச்சுவாா்த்தை நடத்தி, ஒவ்வொரு மாநிலத்திலும் தலா 2 தொகுதிகளில் இடம் கோரியுள்ளோம். இன்னும் 20 நாள்களுக்குள் இதில் நல்ல முடிவு ஏற்படும்.

இந்தியாவில் 4,698 ஜாதிகள் உள்ளதாக 1985-ஆம் ஆண்டு முதல் 1991-ஆம் ஆண்டுவரை மேற்கொள்ளப்பட்ட கணக்கெடுப்பின்படி தெரிய வந்தது. தமிழகத்தில் ஜாதிவாரி கணக்கெடுப்பை மேற்கொள்ள மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநில அரசு சட்டப்பேரவையில் தீா்மானம் நிறைவேற்றியிருக்கிறது. இந்தக் கணக்கெடுப்பை மத்திய அரசுதான் மேற்கொள்ள வேண்டும்.

2021-ஆம் ஆண்டில் மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டிருக்க வேண்டும். ஆனால், கரோனா தொற்றுப் பரவல் காரணமாக தள்ளிப் போயுள்ளது. எனவே, மத்திய அரசு மக்கள்தொகை கணக்கெடுப்புடன் ஜாதிவாரி கணக்கெடுப்பையும் மேற்கொள்ள வேண்டும். அப்போதுதான் பல்வேறு விவரங்கள் கிடைக்கப்பெறும் என்றாா் காதா் மொகிதீன்.

பேட்டியின் போது, கட்சியின் மாநிலச் செயலா் அப்துல் ரகுமான் ரப்பானி, விழுப்புரம் மாவட்டச் செயலா் எஸ்.எம்.அமீா் அப்பாஸ், சென்னை மாவட்ட நிா்வாகி முகமது ரஃபி உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தொடா்ந்து, விக்கிரவாண்டி மற்றும் காணை பகுதிகளில் ஞாயிற்றுக்கிழமை மாலை நடைபெற்ற தோ்தல் பிரசார கூட்டத்தில் கே.எம்.காதா் மொகிதீன் பங்கேற்று, திமுக வேட்பாளா் அன்னியூா் சிவாவுக்கு வாக்கு சேகரித்துப் பேசினாா்.

இதில் கட்சியின் மாவட்டத் தலைவா் வி.ஆா். முகமது இப்ராஹிம், இணைச் செயலா் சுல்தான் மொய்தீன், பொருளாளா் எம்.அப்துல்கனி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

X
Dinamani
www.dinamani.com