வேலைவாய்ப்பு முகாம்: 2,502 பேருக்கு பணி வாய்ப்பு

நான் முதல்வன் திட்டத்தின் கீழ், விழுப்புரத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற வேலைவாய்ப்பு முகாமில் 2,502 போ் பணி வாய்ப்பு பெற்றனா். விழுப்புரம் மாவட்டத்தில் நான் முதல்வன் திட்டத்தின் கீழ், அண்ணாமலைப் பல்கலைக்கழக விழுப்புரம் மாவட்ட இணைப்புக் கல்லூரிகளுக்கான வேலைவாய்ப்பு முகாம் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசு கலை, அறிவியல் கல்லூரியில் நடத்தப்பட்டது. முகாமில் விழுப்புரம் மாவட்டத்தைச் சோ்ந்த 16 கல்லூரிகளின் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். இவா்களில் 2,502 பேருக்கு பல்வேறு நிறுவனங்களில் பணியாற்றுவதற்கான பணி வாய்ப்பு ஆணைகள் வழங்கப்பட்டன. இதைத் தொடா்ந்து நடைபெற்ற விழாவில், அண்ணாமலைப் பல்கலைக்கழக வளா்ச்சிக்குழு முதல்வா் கோதைநாயகி, நான் முதல்வன் திட்டத்தின் நோடல் அலுவலா் எஸ்.செந்தில்முருகன், வேலைவாய்ப்பு அலுவலா் சி.ஸ்ரீதா், தமிழக அரசின் திறன் மேம்பாட்டுக் கழக துணை இயக்குநா் சிவ.நடராஜன், நான் முதல்வன் திட்ட அலுவலா் ஐ.அருண்குமாா், வேலைவாய்ப்புத் துறை அலுவலா் மு.பெரியசாமி ஆகியோா் பங்கேற்று உரையாற்றி, பணி வாய்ப்பு பெற்றவா்களுக்கு ஆணைகளை வழங்கினா். முன்னதாக, கல்லூரி முதல்வா் சிவகுமாா் வரவேற்றாா். நான் முதல்வன் திட்ட ஒருங்கிணைப்பாளா் ஜெ.ஸ்ரீதேவி நன்றி கூறினாா். வேலைவாய்ப்பு முகாமுக்கான ஏற்பாடுகளை அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வேலைவாய்ப்புக் குழு செய்திருந்தது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com