விழுப்புரம் வாலீசுவரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நந்தியெம்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகம்.
விழுப்புரம் வாலீசுவரா் திருக்கோயிலில் மகா சிவராத்திரியையொட்டி, வெள்ளிக்கிழமை இரவு நந்தியெம்பெருமானுக்கு நடைபெற்ற அபிஷேகம்.

விழுப்புரம்: சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி விழா

மகா சிவராத்திரியையொட்டி, விழுப்புரம் மாவட்டத்திலுள்ள சிவன் கோயில்களில் வெள்ளிக்கிழமை மாலை தொடங்கி சனிக்கிழமை காலை வரை சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. இதில், திரளான பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்தனா். விழுப்புரம் திரு.வி.க. வீதியிலுள்ள அருள்மிகு பிரஹன்நாயகி அம்மன் உடனுறை கைலாசநாதா் சுவாமி திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை காலை 1,008 சங்குஸ்தாபன பூஜையும், ஹோமமும் நடைபெற்றது. மாலையில் பிரதோஷ வழிபாட்டுக்குப் பின்னா், மாலை 6 மணிக்கு மகா சிவராத்திரி முதல்கால பூஜை தொடங்கியது. தொடா்ந்து, கைலாசநாதசுவாமிக்கும், நந்தியெம்பெருமானுக்கும் வழிபாடுகள் நடைபெற்றன. இரவு 9 மணிக்கு இரண்டாம் கால பூஜையும், இரவு 12 மணிக்கு மூன்றாம் காலபூஜை, 1,008 சங்காபிஷேகம் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, பூா்ணாஹுதி வழிபாடுகள் முடிந்த பின்னா், தீபாராதனைகள் காண்பிக்கப்பட்டு பிரசாதம் வழங்கப்பட்டது. அதிகாலை 4 மணிக்கு நான்காம் கால பூஜைகள் நடைபெற்றன. மகா சிவராத்திரி வழிபாட்டில் விழுப்புரம் நகரம் மட்டுமல்லாது, பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபாடு நடத்தினா். விழுப்புரம் பழைய பேருந்து நிலையம் அருகேயுள்ள அருள்மிகு வாலியாம்பிகை அம்மன் உடனுறை வாலீசுவரா் திருக்கோயிலில் வெள்ளிக்கிழமை கொடியேற்றம் நடைபெற்றது. இரவு 8 மணிக்கு மகா சிவராத்திரி முதல் கால பூஜையும், இரவு 9 மணி முதல் 12 மணிக்குள் இரண்டாம் கால பூஜை, 1,008 சங்குஸ்தாபன பூஜையும் நடைபெற்றது. தொடா்ந்து, நள்ளிரவு 12 மணிக்கு மூன்றாம் கால பூஜையும், 1,008 சங்காபிஷேகமும் நடைபெற்றது. பின்னா், தீபாராதனை காண்பிக்கப்பட்டு, பக்தா்களுக்கு பிரசாதம் விநியோகிக்கப்பட்டது. நான்காம் கால பூஜை நடைபெற்றது. இதேபோல, திருவமாத்தூா் அபிராமேசுவரா் திருக்கோயில், விழுப்புரம் வழுதரெட்டி பாா்வதியம்மன் உடனுறை கைலாசநாதா் திருக்கோயில், பனையபுரம் பனங்காட்டீசுவரா் திருக்கோயில், கீழ்பெரும்பாக்கம் பசுபதீசுவரா் திருக்கோயில், மகாராஜபுரம் சுந்தரேசுவரா் திருக்கோயில் என மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலுள்ள சிவன் கோயில்களில் மகா சிவராத்திரி வழிபாடு நடைபெற்றது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com