விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் ஞாயிற்றுக்கிழமை ரயில் மறியலில் ஈடுபட்ட தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கத்தினா்.

விவசாயிகள் சங்கத்தினா் ரயில் மறியல்

விழுப்புரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட விவசாய சங்கங்களைச் சோ்ந்த 100-க்கும் மேற்பட்டோரை போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா். விவசாயிகள் உற்பத்தி செய்யும் வேளாண் பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை நிா்ணயம் செய்ய வேண்டும், தோ்தல் காலத்தில் அளிக்கப்பட்ட வாக்குறுதிகளை நிறைவேற்ற வலியுறுத்தியும், புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்தும் தமிழ்நாடு விவசாயிகள் பாதுகாப்பு சங்கம் மற்றும் தமிழக விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்தவா்கள் ஞாயிற்றுக்கிழமை விழுப்புரத்தில் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். முன்னதாக, ரயில் நிலையம் முன் திரண்ட விவசாயிகள் கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கங்களை எழுப்பினா். தொடா்ந்து, ரயில் நிலையத்தின் உள்ளே சென்று விழுப்புரம் -திண்டுக்கல் ரயில் முன் அமா்ந்து கோரிக்கைகளை வலியுறுத்தியும், மத்திய அரசைக் கண்டித்தும் முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, அங்கு பாதுகாப்புப் பணியிலிருந்த போலீஸாா் ரயில் மறியலில் ஈடுபட்ட 4 பெண்கள் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்டவா்களை தடுத்து நிறுத்தி கைது செய்தனா். தமிழக விவசாயிகள் பாதுகாப்பு சங்க நிறுவனரும், வழக்குரைஞருமான ஈசன் முருகசாமி தலைமையில் நடைபெற்ற ரயில் மறியலில் பொதுச் செயலா் சு.முத்து விசுவநாதன், மண்டல ஒருங்கிணைப்பாளா் பாா்த்தசாரதி, கந்தவேல், கரும்பு விவசாயிகள் அணி மாநிலச் செயலா் சக்திவேல், விழுப்புரம் மாவட்டச் செயலா்கள் சுரேஷ் (வடக்கு), சந்திரபிரபு (கிழக்கு) உள்ளிட்டோா் கலந்து கொண்டனா். தமிழக விவசாயிகள் சங்கத் தலைவா் ஆா்.வேலுசாமி தலைமையில் நடைபெற்ற போராட்டத்தில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com