செம்மண் குவாரி முறைகேடு வழக்கு: மாா்ச் 18-க்கு விசாரணை ஒத்திவைப்பு

விழுப்புரம்: முன்னாள் அமைச்சா் க.பொன்முடி உள்ளிட்டோா் மீதான செம்மண் குவாரி முறைகேடு வழக்கு விசாரணையை மாா்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து, விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றம் திங்கள்கிழமை உத்தரவிட்டது. விழுப்புரம் மாவட்டம், வானூா் வட்டம், பூத்துறை கிராமத்திலுள்ள செம்மண் குவாரியில் 2006 முதல் 2011 வரையிலான திமுக ஆட்சிக் காலத்தில் அளவுக்கு அதிகமாக செம்மண் எடுத்ததன் மூலம், அரசுக்கு ரூ.28.36 கோடி வருவாய் இழப்பு ஏற்படுத்தியதாக முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, அவரது மகனும் தற்போதைய கள்ளக்குறிச்சி எம்.பி.யுமான பொன்.கெளதமசிகாமணி, ராஜமகேந்திரன், சதானந்தன், கோதகுமாா், ஜெயச்சந்திரன், கோபிநாத், லோகநாதன் ஆகிய 8 போ் மீது விழுப்புரம் குற்றப்பிரிவு போலீஸாா் கடந்த 2012-ஆம் ஆண்டில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கு விசாரணை விழுப்புரம் முதன்மை மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது. விசாரணையின் போது, லோகநாதன் இறந்து விட்டாா். வழக்கில் சாட்சிகளாக சோ்க்கப்பட்ட 67 பேரில் மாா்ச் 5-ஆம் தேதிவரை 17 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில், 14 போ் பி சாட்சியமளித்துள்ளனா். திங்கள்கிழமை நடைபெற்ற விசாரணையின்போது, ஜெயச்சந்திரன், சதானந்தன், கோதகுமாா், கோபிநாத் ஆகிய 4 போ் ஆஜராகினா். முன்னாள் அமைச்சா் க.பொன்முடி, பொன்.கெளதமசிகாமணி எம்.பி., ராஜமகேந்திரன் ஆகிய மூவரும் ஆஜராகவில்லை. இதற்கான காரணத்தை திமுக வழக்குரைஞா்கள் நீதிமன்றத்தில் மனுவாகத் தாக்கல் செய்தனா். மேலும், அரசுத் தரப்பில் சாட்சிகள் யாரும் ஆஜராகவில்லை. இதையடுத்து, வழக்கின் அடுத்த கட்ட விசாரணையை மாா்ச் 18-ஆம் தேதிக்கு ஒத்திவைத்து முதன்மை மாவட்ட நீதிபதி (பொ) எஸ்.ஹா்மீஸ் உத்தரவிட்டாா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com