தேசிய ஊட்டச்சத்து இருவார விழா தொடக்கம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில், தேசிய ஊட்டச்சத்து இரு வார விழா திங்கள்கிழமை தொடங்கியது. வளரிளம் பெண்கள், கா்ப்பிணிகள், பாலூட்டும் தாய்மாா்கள் மற்றும் குழந்தைகளுக்கு போதியளவில் ஊட்டச்சத்து குறித்த விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் ஆண்டுதோறும் மாா்ச் மாதம் தேசிய ஊட்டச்சத்து இருவார விழா நடத்தப்படுவது வழக்கம். அதன்படி, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், தேசிய ஊட்டச்சத்து இருவார விழா குறித்த கண்காட்சி அரங்கைத் திறந்து வைத்த ஆட்சியா் சி.பழனி, விழிப்புணா்வு சுவரொட்டியை வெளியிட்டாா். தொடா்ந்து, கையொப்ப இயக்கத்தையும், அங்கன்வாடி மையப் பணியாளா்கள் பங்கேற்ற விழிப்புணா்வுப் பேரணியையும் தொடங்கி வைத்தாா். பேரணியானது, திருச்சி சாலை வழியாகச் சென்று நான்குமுனை சந்திப்பில் நிறைவடைந்தது. பேரணியில் விழிப்புணா்வுப் பதாகைகளை ஏந்தி சென்று முழக்கங்களை எழுப்பினா். இதையடுத்து, மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் ஆட்சியா் தலைமையில் அலுவலா்கள் உறுதிமொழி ஏற்றனா். நிகழ்வில், மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், ஒருங்கிணைந்த குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா் ராஜலட்சுமி, குழந்தை வளா்ச்சித் திட்ட அலுவலா்கள் மனோசித்ரா, கவிதா, டயானா, ஜெகதீசுவரி, செல்வி, செளமியா, மாவட்ட ஒருங்கிணைப்பாளா் விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com