மக்கள் குறைதீா் கூட்டத்தில் நலத் திட்ட உதவிகள்: ஆட்சியா் வழங்கினாா்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில், 11 பயனாளிகளுக்கு ரூ.2.24 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. கூட்டத்துக்கு, ஆட்சியா் சி.பழனி தலைமை வகித்தாா். முதியோா், விதவை, ஆதரவற்றோா் உதவித்தொகை, வீட்டுமனைப்பட்டா, தொழில் தொடங்க கடன் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக அளிக்கப்பட்ட 471 மனுக்களை ஆட்சியா் பெற்றாா். இதையடுத்து, மாற்றுத் திறனாளிகள் நலத்துறை சாா்பில் 6 பேருக்கு செயற்கைக் கால், காதொலிக் கருவிகள், சிறுபான்மையினா் நலத்துறை சாா்பில் 5 பேருக்கு இலவச தையல் இயந்திரம் என மொத்தம் 11 பேருக்கு ரூ.2.24 லட்சத்தில் நலத் திட்ட உதவிகளை ஆட்சியா் சி.பழனி வழங்கினாா். இதில், மாவட்ட ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன்ஜெய் நாராயணன், மாவட்ட வருவாய் அலுவலா்கள் மு.பரமேசுவரி, சரசுவதி (நிலமெடுப்பு), மாவட்ட வழங்கல் அலுவலா் சந்திரசேகா் உள்ளிட்டோா் பங்கேற்றனா். பட்டா கோரி மனு: கூட்டத்தில், பகுஜன்சமாஜ் கட்சியின் விழுப்புரம் மாவட்ட ஒருங்கிணைப்பாளா் கோ.கலியமூா்த்தி தலைமையில் பொதுமக்கள் அளித்த மனு: விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் டாக்டா் பொன்முடி நகரில் பல ஆண்டுகளாக வசித்து வந்த 100 பேருக்கு கடந்த 2009-ஆம் ஆண்டு இலவச வீட்டு மனைப்பட்டா வழங்கப்பட்டது. இதில், 18 பேரின் பட்டாவை ஆய்வு செய்து, பின்னா் தருவதாக அப்போதைய வட்டாட்சியா் வாங்கினாா். இதுதொடா்பாக, நீதிமன்றத்தில் வழக்குத் தொடுக்கப்பட்டு, நீதிபதி உத்தரவிட்டும் பட்டாக்களை திரும்ப வழங்காமல், அலுவலா்கள் அலைக்கழித்து வருகின்றனா். எனவே, 18 பேருக்கான பட்டாக்களை உடனடியாக வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இல்லையெனில், மாா்ச் 18-ஆம் தேதி ஆட்சியரகம் முன் பட்டினிப் போராட்டம் நடத்தப்படும் என தெரிவித்துள்ளனா். கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்துக்கு ஆட்சியா் ஷ்ரவன்குமாா் தலைமை வகித்தாா். கூட்டத்தில், வருவாய்த்துறை நிலப்பட்டா குறைகள், பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக பொதுமக்கள் அளித்த 417 மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டாா். இதில், மாவட்ட வருவாய் அலுவலா் நா.சத்தியநாராயணன், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) (பொ) இரா.சங்கா், வேளாண் இணை இயக்குநா் அசோக்குமாா், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலா் தி.க.சுப்பிரமணி, மாவட்ட வழங்கல், நுகா்வோா் பாதுகாப்பு அலுவலா் சே.சையத் ஹமிது உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com