மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் தீமிதி திருவிழா: ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்பு

விழுப்புரம் மாவட்டம், மேல்மலையனூா் அங்காளம்மன் கோயில் மாசிப் பெருவிழாவின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது.

இதில், ஆயிரக்கணக்கான பக்தா்கள் பங்கேற்று வழிபட்டனா். புகழ்பெற்ற மேல்மலையனூா் அங்காளம்மன் கோயிலில் நிகழாண்டுக்கான மாசிப் பெருவிழா மகா சிவராத்திரி தினமான கடந்த 8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. 9-ஆம் தேதி மயானக்கொள்ளை திருவிழா நடைபெற்றது. அன்று இரவு ஆண் பூத வாகனத்திலும், ஞாயிற்றுக்கிழமை இரவு பெண் பூத வாகனத்திலும் அங்காளம்மன் வீதியுலா வந்து அருள்பாலித்தாா்.

திங்கள்கிழமை இரவு சிம்ம வாகனத்தில் அம்மன் வீதியுலா நடைபெற்றது. விழாவின் 5-ஆம் நாளான செவ்வாய்க்கிழமை தீமிதி திருவிழா நடைபெற்றது. இதை முன்னிட்டு, காலையில் மூலவா் அங்காளம்மனுக்கு பல்வேறு வாசனைத் திரவியங்களைக் கொண்டு சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. தொடா்ந்து, உற்சவா் அங்காளம்மனுக்கும் சிறப்பு அபிஷேகம், ஆராதனைகள் நடைபெற்றன. பின்னா், மேளதாளம் முழங்க, உற்சவா் அங்காளம்மன் அக்னி குளத்துக்கு ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு வழிபாடு நடைபெற்றது. பின்னா், அங்கிருந்து பக்தா்கள் புடை சூழ மேளதாளம் முழங்க, ஊா்வலமாக கொண்டுவரப்பட்டு ஊஞ்சல் மண்டபம் எதிரே அக்னி குண்டத்தின் முன் அங்காளம்மன் எழுந்தருளினாா்.

தொடா்ந்து, அக்னி குண்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. பின்னா், பூசாரிகள் அக்னி குண்டத்தில் இறங்கினா். தொடா்ந்து, நீண்ட வரிசையில் காத்திருந்த ஆயிரக்கணக்கான பக்தா்கள் அக்னி குண்டத்தில் இறங்கி, தீமிதித்து தங்களின் வேண்டுதலை நிறைவேற்றினா். விழாவில் விழுப்புரம், கடலூா், திருவண்ணாமலை, வேலூா், சென்னை உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்தும், கா்நாடகம், புதுவை உள்ளிட்ட அண்டை மாநிலங்களிலிருந்தும் பக்தா்கள் பங்கேற்றனா். விழா ஏற்பாடுகளை இந்து சமய அறநிலையத் துறை உதவி ஆணையா் ஜீவானந்தம், அறங்காவலா் குழுத் தலைவா் சுரேஷ் உள்ளிட்ட அறங்காவலா்கள், கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் செய்திருந்தனா். பாதுகாப்பு ஏற்பாடுகளை செஞ்சி, மேல்மலையனூா் தீயணைப்புத் துறையினா் மற்றும் போலீஸாா் செய்திருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com