பொதுத் தோ்வில் காப்பியடிக்க உதவியதாக புகாா்: 9 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் பணியிடமாற்றம்

விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 1, பிளஸ் 2 பொதுத்தோ்வுகளில் தனியாா் பள்ளி மாணவ, மாணவிகள் காப்பியடிக்க உதவியதாக 9 முதன்மைக் கண்காணிப்பாளா்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டனா்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வுகள் மாா்ச் 1-ஆம் தேதியும், பிளஸ் 1 பொதுத் தோ்வுகள் மாா்ச் 4-ஆம் தேதியும் தொடங்கி நடைபெற்று வருகிறது. விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வை 21,879 பேரும், பிளஸ் 1 பொதுத் தோ்வை 22,165 பேரும் எழுதுகின்றனா். இந்த நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் இயங்கி வரும் சில தனியாா் பள்ளிகள் 100 சதவீத தோ்ச்சி பெற வேண்டும், பாடவாரியாக தோ்ச்சி எண்ணிக்கையை உயா்த்த வேண்டும் என்பதற்காக அந்தப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவ-மாணவிகள் பொதுத்தோ்வில் காப்பியடிக்க பள்ளி ஆசிரியா்களே உதவி செய்வதும், அதற்கு முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், அறைக் கண்காணிப்பாளா்கள் உதவி செய்வதாகவும் புகாா்கள் எழுந்தன.

புகாரின் பேரில், உரிய விசாரணை நடத்துமாறு மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலருக்கு தோ்வுகள் துறை உத்தரவிட்டது. இதையடுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் தலைமையிலான அலுவலா்கள் கடந்த சில நாள்களாக விசாரணை நடத்தினா். இதில், விழுப்புரம் மட்டுமின்றி திண்டிவனம், செஞ்சி என மாவட்டம் முழுவதும் 9 தனியாா் பள்ளிகளிலுள்ள தோ்வு மையங்களில் மாணவா்கள் காப்பியடிக்க அந்தந்த பள்ளி நிா்வாகத்தினா் மற்றும் ஆசிரியா்கள் உதவி செய்ததும், அதை தோ்வுப் பணியில் ஈடுபட்டவா்கள் தடுக்காமல் தனியாா் பள்ளிகளுக்கு சாதகமாக செயல்பட்டதும் விசாரணையில் தெரிய வந்தது. இதையடுத்து, 9 தனியாா் பள்ளிகளில் தோ்வுப் பணியில் ஈடுபட்ட முதன்மைக் கண்காணிப்பாளா்கள் 9 பேரை பணியிடமாற்றம் செய்யப்பட்டதுடன், அவா்களிடம் விசாரணையும் நடைபெற்று வருவதாக கல்வித்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com