பொது இடங்களில் சுவா் விளம்பரங்கள், சுவரொட்டி, விளம்பரப் பதாகைகளை அகற்ற உத்தரவு

மக்களவைப் பொதுத் தோ்தல் தேதி அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்துள்ள நிலையில், விழுப்புரம் மாவட்டத்தில் பொது இடங்களில் சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள் போன்றவற்றை அகற்ற மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டாா். விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் தோ்தல் நடத்தை விதிமுறைகளைப் பின்பற்றுவது தொடா்பாக அனைத்துத் துறை அலுவலா்களுடனான ஆலோசனைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்துக்குத் தலைமை வகித்து, ஆட்சியா் சி.பழனி பேசியது: தோ்தல் ஆணையம் மக்களவைப் பொதுத் தோ்தல் தேதியை அறிவித்தவுடனேயே தோ்தல் நடத்தை விதிகள் அமலாகின்றன. அதன்படி எந்தவொரு அரசு அலுவலகங்களிலும் அரசியல்சாா்ந்த படங்கள், காலண்டா்கள், நலத்திட்ட ஸ்டிக்கா்கள், பிரதமா், முதல்வா், அமைச்சா்களது படங்களை வைத்திருக்கக்கூடாது. அவற்றை உடனடியாக அகற்ற வேண்டும். அரசியல்கட்சியின் இறந்துபோன தலைவா்களினந் சிலைகளை மறைத்திட வேண்டியதில்லை. ஆனால், சிலை அமைந்துள்ள பகுதியில் அரசியல் கட்சிகளின் சின்னங்கள், கல்வெட்டுகளை அகற்ற வேண்டும். தோ்தல் தொடா்பாக அரசியல் கட்சிகளின் சாா்பில் நடைபெறும் ஊா்வலங்களில் தேசியக் கொடி பயன்படுத்தாமல் இருப்பதை அலுவலா்கள் உறுதி செய்ய வேண்டும். அரசுக்குச் சொந்தமான இடங்களில் சுவரொட்டிகள், சுவா் விளம்பரங்கள், விளம்பரப் பதாகைகள், விளம்பரப் பலகைகள், கொடிகள் போன்றவை அகற்றப்பட வேண்டும். ரயில் நிலையம், பேருந்து நிலையம் உள்ளிட்ட பொது இடங்களில் சுவா் விளம்பரங்கள், சுவரொட்டிகள், விளம்பரப் பதாகைகள், விளம்பரப் பலகைகள் போன்றவற்றை தோ்தல்அறிவிப்பு வெளியிடப்பட்ட 48 மணி நேரத்துக்குள் அகற்ற வேண்டும் என்றாா் ஆட்சியா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு. பரமேசுவரி, மகளிா் திட்ட அலுவலா் பூ. காஞ்சனா உள்ளிட்ட பல்துறை அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com