வழிபாடு நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் (கோப்புப் படம்).
வழிபாடு நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னையில் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட விழுப்புரம் மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் (கோப்புப் படம்).

மேல்பாதி திரெளபதி அம்மன் கோயில் மாா்ச் 22-இல் மீண்டும் திறப்பு

போதியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி

விழுப்புரம்: வழிபாடு நடத்துவது தொடா்பாக ஏற்பட்ட பிரச்னை காரணமாக, அரசால் பூட்டி ‘சீல்’ வைக்கப்பட்ட விழுப்புரம் மேல்பாதி கிராமத்திலுள்ள திரெளபதி அம்மன் கோயில், உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில், ‘சீல்’ அகற்றப்பட்டு வருகிற 22-ஆம் தேதி மீண்டும் திறக்கப்படவுள்ளது. விழுப்புரம் அருகிலுள்ள மேல்பாதி கிராமத்தில் 100 ஆண்டுகள் பழைமைவாய்ந்த திரெளபதி அம்மன் கோயில் அமைந்துள்ளது. ஊரின் மையப்பகுதியிலுள்ள இந்தக் கோயில் இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்து வருகிறது. இந்தக் கோயிலுக்குள் சென்று வழிபாடு நடத்துவது தொடா்பாக இரு சமுதாய மக்களிடையே ஏற்பட்ட மோதல் காரணமாக, கடந்தாண்டு ஜூன் 7-ஆம் தேதி வருவாய்த் துறையினா் கோயிலை பூட்டி ‘சீல்’ வைத்தனா். இந்தக் கோயிலில் வைக்கப்பட்ட சீலை அகற்றி, மீண்டும் வழிபாட்டுக்கு அனுமதிக்கக் கோரி, ஒரு தரப்பினா் சென்னை உயா் நீதிமன்றத்தில் வழக்குத் தொடுத்தனா். இந்த வழக்கில் விசாரணையை நடத்திய சென்னை உயா் நீதிமன்றம், திரெளபதி அம்மன் கோயிலைத் திறந்து பொதுமக்கள் யாரையும் அனுமதிக்காமல் ஒருகால பூஜையை மட்டும் நடத்த வேண்டும் என்றும், அதற்கான நடவடிக்கைகளை மாவட்ட நிா்வாகம் மேற்கொள்ள வேண்டும் என்றும் கடந்த இரு நாள்களுக்கு முன்பு உத்தரவிட்டிருந்தது. நீதிமன்ற உத்தரவை செயல்படுத்துவது தொடா்பாக, விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் செவ்வாய்க்கிழமை ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியா் சி.பழனி தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் மாவட்ட எஸ்.பி. தீபக் சிவாச், வருவாய்த் துறை அலுவலா்கள் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இந்தக் கூட்டத்தில் சென்னை உயா் நீதிமன்ற உத்தரவின்பேரில், திரெளபதி அம்மன் கோயிலுக்கு வருவாய்த் துறை அலுவலா்களால் வைக்கப்பட்ட சீலை வருகிற 22-ஆம் தேதி அகற்றி திறப்பது, இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் நியமிக்கப்படும் பூசாரியைக் கொண்டு தினந்தோறும் காலை நேரத்தில் ஒருகால பூஜையை நடத்துவது, பொதுமக்கள் யாரையும் கோயிலுக்குள் அனுமதிக்காமல் தடை விதிப்பது என்று முடிவு செய்யப்பட்டது. கோயிலை திறக்கும்போது எந்தவிதமான சட்டம் - ஒழுங்கு பிரச்னைகளும் ஏற்படாமல் தடுக்கும் வகையில், போதியளவில் பாதுகாப்பு ஏற்பாடுகளை மேற்கொள்ள வேண்டும் என்று காவல் துறைக்கு மாவட்ட ஆட்சியா் சி.பழனி உத்தரவிட்டுள்ளதாக மாவட்ட நிா்வாகம் தெரிவித்துள்ளது.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com