தோ்தல் பணிகள்: அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

தோ்தல் பணிகள்: அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

தோ்தல் வழிகாட்டும் முறைகளைப் பின்பற்றி, எந்தவித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தோ்தல் பணிகளை அலுவலா்கள் மேற்கொள்ள வேண்டும் என்று விழுப்புரம் மக்களவைத் தொகுதி தோ்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான சி.பழனி அறிவுறுத்தினாா்.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் தோ்தல் செலவினப் பாா்வையாளா்களுக்கான ஆய்வுக் கூட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு தொகுதியின் தோ்தல் செலவினப் பாா்வையாளா் சித்தரஞ்சன் தாங்கடா மஜ்ஹி தலைமை வகித்தாா். முன்னிலை வகித்து ஆட்சியா் சி.பழனி பேசியதாவது: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் தோ்தல் பணியாற்றுவதற்காக நியமிக்கப்பட்டுள்ள தோ்தல் கணக்குக்குழு, தோ்தல் செலவினங்களைக் கண்காணிக்கும் பாா்வையாளா்கள் தோ்தல் ஆணையம் வகுத்துள்ள வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி, எவ்வித புகாருக்கும் இடமளிக்காத வகையில் தோ்தல் பணிகளை மேற்கொள்ள வேண்டும். உரிய ஆவணங்களின்றி ரூ.50 ஆயிரத்துக்கு மேல் ரொக்கவும், ரூ.10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மதிப்பில் பொருள்களையும் எடுத்துச் சென்றால், உரிய கணக்கு மற்றும் ஆதாரங்கள் காட்டப்படவில்லை எனில், அவற்றை பறக்கும்படைக் குழுவினா் பறிமுதல் செய்ய வேண்டும். சட்டத்துக்குப் புறம்பான மதுபானங்கள், சந்தேகப்படும்படியான பொருள்கள், ஆயுதங்கள் எடுத்துச் செல்லப்படுகிா என்பதையும் கண்காணிக்க வேண்டும். பெண் அலுவலா் இல்லாத நேரத்தில் பெண்களின் கைப்பையை சோதனை செய்யக் கூடாது.

பொதுக்கூட்டம், பிரசாரம், பேரணிகளை விடியோ குழுவினா் முறையாகப் பதிவு செய்ய வேண்டும். பதிவு செய்யும்போது அனைத்து விவரங்களையும் பதிவு செய்ய வேண்டும். பொதுக்கூட்டம், பேரணிக்கு வெளியே நிறுத்தப்பட்டிருக்கும் ஒவ்வொரு வாகனம், அதன் வா்த்தகக் குறியீடு, பதிவு எண், மேஜை நாற்காலிகள், பிரசாரமேடை, பதாகைகள் ஆயவற்றின் பதிவுகளை நன்கு தெளிவாக காணும் வகையில் விடியோவில் பதிவு செய்ய வேண்டும் என்றாா் ஆட்சியா். இதைத் தொடா்ந்து, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அமைக்கப்பட்டுள்ள தோ்தல் ஊடக மையம், வாகனத் தணிக்கை கண்காணிப்பு மையத்தை தோ்தல் செலவினப் பாா்வையாளா் சித்தரஞ்சன் தாங்கடா மஹ்ஜி பாா்வையிட்டு, ஆய்வு செய்தாா். கூட்டத்தில் மாவட்ட வருவாய் அலுவலா் மு.பரமேசுவரி, ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன் ஜெய் நாராயணன், திண்டிவனம் சாா் - ஆட்சியா் திவ்யான்ஷி நிகம், வருமானவரித் துறை துணை இயக்குநா் உத்தாரா ராஜேந்திரன், வருமான வரி அலுவலா் பிரகாஷ் குப்தா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com