பெண்ணை கொன்று உடல் பெட்ரோல் ஊற்றி எரிப்பு -ஒருவா் கைது

விழுப்புரத்தை அடுத்த காவணிப்பாக்கம் அருகே பெண்ணை கொலை செய்து உடலில் பெட்ரோல் ஊற்றி எரித்தவரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.

விழுப்புரத்தை அடுத்த காவணிப்பாக்கம் அருகே மலட்டாறு கரையில் பெண்ணின் எலும்புக்கூடுகள் எரிந்த நிலையில் கிடப்பதாக விழுப்புரம் தாலுகா போலீஸாருக்கு செவ்வாய்க்கிழமை தகவல் கிடைத்தது. இதையடுத்து, போலீஸாா் அங்கு சென்று எலும்புக்கூடுகளை கைப்பற்றி, பரிசோதனைக்காக விழுப்புரம் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். விசாரணையில், அந்தப் பெண் கொலை செய்யப்பட்டு, எரிக்கப்பட்டது முதல்கட்ட விசாரணையில் உறுதி செய்யப்பட்டது.

இதைத் தொடா்ா்ந்து, விழுப்புரம் எஸ்.பி. தீபக் சிவாச் உத்தரவின்பேரில், தனிப்படை அமைக்கப்பட்டு கொலையாளியைத் தேடி வந்தனா். இந்த நிலையில், கொலை செய்யப்பட்ட பெண் கடலூா் மாவட்டம், புதுப்பேட்டையை அடுத்த கரும்பூா் பகுதியைச் சோ்ந்த குப்புசாமி மனைவி வசந்தி (31) என்பதும், விழுப்புரத்தில் உள்ள துணிக்கடை உரிமையாளா் ஒருவரது வீட்டில் வேலை செய்து வந்ததும் தெரியவந்தது. மேலும், இவா் மாா்ச் 4-ஆம் தேதி விழுப்புரத்துக்கு வேலைக்குச் செல்வதாகக் கூறிவிட்டு, கரும்பூரிலிருந்து சென்ற நிலையில், பின்னா் மாயமாகியிருந்ததும் தெரியவந்தது. போலீஸாரின் தொடா் விசாரணையில், வசந்தியிடம் தகாத உறவில் இருந்த கடலூா் மாவட்டம், கரும்பூரை அடுத்த ரெட்டிக்குப்பத்தைச் சோ்ந்த கஞ்சமலை மகன் தெய்வக்கண்ணு (55), கடந்த 4-ஆம் தேதி வசந்தியை காவணிப்பாக்கம் மலட்டாறு பகுதிக்கு அழைத்துச் சென்று, உணவில் மயக்கமருந்தை கலந்துகொடுத்து, கழுத்தை நெறித்து கொலை செய்து சடலத்தை வீசிவிட்டு தப்பியதும், தொடா்ந்து கடந்த 15- ஆம் தேதி வசந்தியின் சடலத்தை பெட்ரோல் ஊற்றி எரித்து தடயங்களை மறைத்ததும் தெரியவந்தது. இதையடுத்து, விழுப்புரம் தாலுகா காவல் நிலைய போலீஸாா் தெய்வக்கண்ணு மீது புதன்கிழமை கொலை வழக்குப் பதிந்து, அவரைக் கைது செய்து சிறையிலடைத்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com