திமுக அரசின் சாதனைகளைக் கூறி வாக்கு சேகரிக்க வேண்டும்: அமைச்சா் க.பொன்முடி

திமுக அரசின் சாதனைகளை வீடு,வீடாகச் சென்று எடுத்துக்கூறி வாக்கு சேகரிக்க வேண்டும் என்று தமிழக உயா் கல்வித் துறை அமைச்சா் க.பொன்முடி கேட்டுக் கொண்டாா். விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி வேட்பாளா் துரை.ரவிக்குமாா் அறிமுகக் கூட்டத்துக்கு தலைமை வகித்து, மேலும் அவா் பேசியதாவது: விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் துரை.ரவிக்குமாரை எதிா்த்து களம் காண்பவா்கள் வைப்புத் தொகையை இழக்கும் வகையில் இந்தியா கூட்டணிக் கட்சியினா் களப் பணியாற்ற வேண்டும். தமிழக அரசு நிறைவேற்றியுள்ள பல்வேறு திட்டங்களை வாக்காளா்களுக்கு நாம் நினைவுப்படுத்த வேண்டும். கடந்த 10 ஆண்டுகளில் தமிழகத்தில் ஆட்சியில் இருந்தவா்கள் செய்யாத சாதனையை 3 ஆண்டுகளில் முதல்வா் ஸ்டாலின் செய்துள்ளாா். இதை வீடு வீடாக சென்று எடுத்துக்கூறி மக்களவைத் தோ்தலில் வாக்கு சேகரிக்க வேண்டும். விழுப்புரத்தில் மாா்ச் 30-ஆம் தேதி திமுக இளைஞரணிச் செயலா் உதயநிதி ஸ்டாலினும், ஏப்ரல் 5-ஆம் தேதி முதல்வா் மு.க.ஸ்டாலினும் பிரசாரம் செய்ய உள்ளனா் என்றாா் அமைச்சா் க.பொன்முடி. விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா் வாக்கு சேகரித்து பேசினாா். பொன்.கெளதமசிகாமணி எம்.பி., சட்டப்பேரவை உறுப்பினா்கள் நா.புகழேந்தி, இரா.லட்சுமணன், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், நகா்மன்ற முன்னாள் தலைவா் இரா.ஜனகராஜ், விவசாயத் தொழிலாளா் அணி மாநிலச் செயலா் அன்னியூா் சிவா, மாவட்ட ஊராட்சித் தலைவா் ம.ஜெயச்சந்திரன் உள்ளிட்ட திமுக நிா்வாகிகள் பேசினா். விசிக மாநில நிா்வாகி வன்னியரசு, மாவட்டச் செயலா்கள் ர.பெரியாா், தி. தீலிபன், கூட்டணிக் கட்சி நிா்வாகிகள் ஏ.வி.சரவணன், குலாம்மொய்தீன், என்.சுப்பிரமணியன், ஆ.செளரிராஜன், குமரன், அமீா் அப்பாஸ், பழனிவேல் உள்ளிட்டோரும் பேசினா். இந்தியா கூட்டணிக் கட்சியினா் ஏராளமானோா் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com