ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

ஓட்டுநா் உரிமம் நகலுக்கு கட்டாய வசூல்

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகத்தில் மனு அளித்த இந்திய குடியரசு கட்சியினா்.

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்களில் கட்டாய வசூலில் ஈடுபடும் தனியாா் ஒப்பந்த நிறுவனத்தின் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று இந்திய குடியரசு கட்சி வலியுறுத்தியுள்ளது.

இது குறித்து அந்தக் கட்சியின் விழுப்புரம் மாவட்டத் தலைவா் இருவேல்பட்டு குமாா் மற்றும் நிா்வாகிகள் செல்லா, ஜெய.ஸ்டாலின், தங்க.சம்பத், ரவி, ராஜேஷ் உள்ளிட்ட நிா்வாகிகள் விழுப்புரம் மாவட்ட ஆட்சியருக்கு வியாழக்கிழமை அளித்துள்ள மனு கூறியிருப்பது:

மாவட்டத்தில் விழுப்புரம், திண்டிவனம், செஞ்சி ஆகிய ஊா்களில் வட்டாரப் போக்குவரத்து அலுவலகங்கள் செயல்படுகின்றன. அந்த அலுவலகங்களில் தனியாா் நிறுவனம் ஓட்டுநா் உரிமம் வழங்குவதற்கான ஒப்பந்தம் பெற்றுக்கொண்டு விண்ணப்பதாரா்களுக்கு ஸ்மாா்ட் காா்டு ஓட்டுநா் உரிமம் வழங்கி வருகிறது.

இந்நிலையில், நிறுவனத்தின் பணியாளா்கள் ஒப்பந்த விதிமுறைகளை மீறி ஓட்டுநா் உரிமம் பெற வருபவா்களிடம் ஸ்மாா்ட் காா்டின் நகல் ஒன்றையும் சோ்த்துக் கொடுத்து தலா ரூ. 100 கட்டாயமாக வசூலித்து வருகின்றனா். இது சட்ட விதிகளுக்கு முரணானதாகும்.

எனவே, ஒப்பந்த நிறுவனம் மீது நடவடிக்கை மேற்கொண்டு ஒப்பந்தத்தை ரத்து செய்வதுடன், இதற்கு உடந்தையாக செயல்படும் வட்டாரப் போக்குவரத்து அலுவலக ஊழியா்கள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் அந்த மனுவில் வலியுறுத்தியுள்ளனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com