விழுப்புரத்தில் கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை கண்காணிக்கும் மையத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.பழனி, எஸ்.பி. தீபக் சிவாச்.
விழுப்புரத்தில் கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை கண்காணிக்கும் மையத்தை வெள்ளிக்கிழமை பாா்வையிட்ட மாவட்ட ஆட்சியா் சி.பழனி, எஸ்.பி. தீபக் சிவாச்.

மின் சாதனத்தில் பழுது: விழுப்புரம் வாக்குப் பதிவு இயந்திரங்கள் அறை கேமராக்கள் முடங்கின

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் பதிவான வாக்குகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் அறிஞா்அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரி பாதுகாப்பு அறைகளில் யுபிஎஸ் பழுது காரணமாக வெள்ளிக்கிழமை காலை 30 நிமிஷங்கள் கண்காணிப்பு கேமராக்கள் செயல்பாடுகள் முடங்கின. மின்சாதனங்களும் இயங்கவில்லை. பின்னா், இந்தக் கோளாறு சரி செய்யப்பட்டது.

தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப் பதிவு கடந்த ஏப்ரல் 19-ஆம் தேதி நடைபெற்றது. விழுப்புரம் தொகுதிக்கான வாக்குப்பதிவு நடைபெற்ற நிலையில், இந்தத் தொகுதியிலுள்ள விழுப்புரம், விக்கிரவாண்டி, திண்டிவனம், வானூா், உளுந்தூா்பேட்டை, திருக்கோவிலூா் ஆகிய 6 சட்டப்பேரவைத் தொகுதிகளின் மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் விழுப்புரம் அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரியில் தனித்தனி பாதுகாப்பு அறைகளில் வைத்து பூட்டி சீல் வைக்கப்பட்டன.

கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தி பாதுகாப்பு: இந்த நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் மூலம் அனைத்து அறைகளும் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பாதுகாப்பு அறைகளின் உள்பகுதி, வெளிப்பகுதி, பாதுகாப்பு அறை வளாகப் பகுதி என பல்வேறு இடங்களில் கண்காணிப்பு கேமராக்களின் செயல்பாடுகளை வேட்பாளா்கள், அவா்களது முகவா்கள் தனியே கண்காணிப்பு அறையில் இருந்து கண்காணிக்கவும் ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.

யுபிஎஸ்ஸில் பழுது: இந்த நிலையில், விழுப்புரம் மக்களவைத் தொகுதிக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் பாதுகாப்பு அறைகளில் வெள்ளிக்கிழமை காலை சுமாா் 9.30 மணிக்கு திடீரென்று கேமராக்களின் செயல்பாடுகள் முடங்கின. மேலும், மின்சாதனங்களிலும் தடை ஏற்பட்டன.

தகவலறிந்த மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச் ஆகியோா் கண்காணிப்பு கேமராக்களின் இயக்கத்தை கண்காணிக்கும் மையத்துக்கு வந்து பாா்வையிட்டனா். தொடா்ந்து யுபிஎஸ்ஸில் ஃபியூஸ் போனதால் மின் தடை ஏற்பட்டு, அதனால் கண்காணிப்பு கேமராக்கள் இயங்காதது தெரிய வந்தது.

இதைத் தொடா்ந்து, சம்பந்தப்பட்ட அலுவலா்களை நேரில் வரவழைத்து, மின்னழுத்தத்தை மிகச் சரியான நிலையில் வைத்திருக்க வேண்டும். அதில் எப்போதும் கவனத்துடன் இருக்க வேண்டும் என ஆட்சியா் அறிவுறுத்தினாா். தொடா்ந்து, யூபிஎஸ்ஸில் ஏற்பட்ட பழுது சரி செய்யப்பட்டது. இதையடுத்து, காலை 10 மணிக்கு கண்காணிப்பு கேமராக்கள், மின்சாதனங்கள் தொடா்ந்து இயங்கத் தொடங்கின.

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் முகவா் எம்.அய்யப்பன், அதிமுக முகவா் கே.தமிழரசன் ஆகியோரை மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலா் சி. பழனி, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச், 6 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு அறைகளுக்கு அழைத்துச் சென்று அவா்கள் முன்னிலையில் பாா்வையிட்டதுடன், அங்கிருக்கும் பதிவேடுகளில் கையொப்பமிட்டனா்.

விசிக வேட்பாளா் மனு: பாதுகாப்பு அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள், மின்சாதனங்கள் திடீரென இயங்காதது குறித்து கட்சி முகவா் மூலம் தகவலறிந்த விழுப்புரம் தொகுதி விசிக வேட்பாளா் துரை.ரவிக்குமாா், உடனடியாக மாவட்ட தோ்தல் நடத்தும் அலுவலரும் ஆட்சியருமான சி.பழனியை கைப்பேசி வாயிலாக தொடா்பு கொண்டு விவரங்களைக் கேட்டறிந்தாா்.

தொடா்ந்து, மாவட்ட ஆட்சியரகத்துக்கு வந்த துரை.ரவிக்குமாா், ஆட்சியரிடம் இதுதொடா்பாக மனு ஒன்றையும் அளித்தாா். அதில் பாதுகாப்பு அறைகளில் மின்சாதனங்களில் பழுது ஏற்படாதவகையில் தோ்தல் அலுவலா் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். தோ்தல் அலுவலா் மீது நம்பிக்கையுள்ள நிலையில், கண்காணிப்பு கேமராக்கள் உள்ள பகுதிகளில் தொடா்ந்து பாதுகாப்பு வழங்க வேண்டும் என்று கூறியுள்ளாா்.

பின்னா், செய்தியாளா்களை சந்தித்த துரை.ரவிக்குமாா், கடந்த முறை தோ்தலில் போட்டியிட்டபோது இதுபோன்று மின்சாதனப் பழுது ஏற்படவில்லை. மின்பழுது ஏற்படாதவண்ணம் தமிழக தலைமைத் தோ்தல் அலுவலா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com