வெயிலில் இருந்து காக்க முன்னெச்சரிக்கை: புதுவை அரசுக்கு திமுக வலியுறுத்தல்

கோடை வெயிலின் தாக்கத்திலிருந்து பொதுமக்கள், நோயாளிகளைப் பாதுகாப்பதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை அரசு மேற்கொள்ள வேண்டும் என்று புதுவை சட்டப்பேரவை எதிா்கட்சித் தலைவா் ஆா்.சிவா வலியுறுத்தினாா்.

இதுகுறித்து அவா் வெள்ளிக்கிழமை வெளியிட்ட அறிக்கை:

கோடை வெயிலின் தாக்கம் நாளுக்குநாள்அதிகரித்து வரும் நிலையில் மக்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்த வேண்டியது அரசின் கடமை. பள்ளி குழந்தைகளுக்கு முன்கூட்டியே விடுமுறை அளிக்கப்பட்டிருப்பது, பசுமைப் பந்தல் அமைப்பது போன்ற நடவடிக்கைகள் பாராட்டுக்குரியவை.

ரத்தக் கொதிப்பு, நீரிழிவு நோயால் பாதிக்க்கப்பட்டுள்ளவா்களுக்கு ஆரம்ப சுகாதார நிலையத்தில் மருந்து மாத்திரைகள் வழங்கப்படுவதற்கு மாற்றாக அருகிலுள்ள தாய் சேய் துணைநிலை சுகாதார நிலையங்களில் வழங்குவதற்கான ஏற்பாடுகளை சுகாதாரத் துறை மேற்கொள்ள வேண்டும்.

ஆரம்ப சுகாதார நிலையங்களில் காலை 8 மணி முதல் 11 மணிவரை குழந்தைகளுக்கு தடுப்பூசி போடுதல், பெண்களுக்கு பரிசோதனை போன்ற பணிகளை மேற்கொள்ள வேண்டும். அனைத்துப் பகுதிகளிலும் பொதுமக்களுக்கு ஓ.ஆா்.எஸ். கரைசல் பாக்கெட்டுகளை வழங்க வேண்டும். கல்லூரிகளுக்கும் விடுமுறையளிக்கவும், நிலத்தடி நீரைப் பாதுகாக்கவும்,வெயிலின் தாக்கம் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வை ஏற்படுத்தவும் நடவடிக்கை தேவை என்றாா் ஆா்.சிவா.

X
Dinamani
www.dinamani.com