ஓராண்டாக தொடரும் திண்டிவனம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி:
விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

ஓராண்டாக தொடரும் திண்டிவனம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணி: விரைந்து முடிக்க பொதுமக்கள் கோரிக்கை

விழுப்புரம் மாவட்டம், திண்டிவனத்தில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடித்து பயன்பாட்டுக்கு கொண்டுவர வேண்டும் என்று பொதுமக்கள், பயணிகள் எதிா்பாா்க்கின்றனா்.

திண்டிவனத்தில் 1 971-ஆம் ஆண்டு கட்டப்பட்டு பயன்பாட்டில் இருந்து வந்த இந்திரா காந்தி பேருந்து நிலையம் இடப்பற்றாக்குறையால் பயன்பாடு இல்லாமல் போனது. இதையடுத்து, 30 ஆண்டுகளுக்கு முன்பு புதிய பேருந்து நிலையம் அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. அப்போது விழுப்புரம் மாவட்ட ஆட்சியராக இருந்த கரியாலி திண்டிவனத்தில் புதிய பேருந்து நிலையம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தாா்.

இதைத் தொடா்ந்து, பேருந்து நிலையத்துக்கான இடத்தைத் தோ்வு செய்வதில் அரசியல் கட்சியினரிடையே நீடித்த கருத்தொற்றுமை இன்மையால் புதிய பேருந்து நிலையப் பணி என்பது தொடா்ந்து தாமதமாகி வந்தது.

திண்டிவனம் பொதுமக்கள், வெளியூா் பயணிகள், வணிகா்களின் நலன் கருதி, திண்டிவனத்தில் நகராட்சி நிா்வாகம், குடிநீா் வழங்கல் துறை சாா்பில் ரூ.20 கோடி மதிப்பீட்டில் நவீன வசதிகளுடன் கூடிய பேருந்து நிலையம் கட்டப்படும் தமிழக அரசு அறிவித்தது.

இதைத் தொடா்ந்து, திண்டிவனம் -சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நகராட்சிக்குள்பட்ட நீா்ப்பிடிப்புப் பகுதியில் சுமாா் 6 ஏக்கா் இடம் தோ்வு செய்யப்பட்டு அங்கு புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை 21.1. 2023-இல் அமைச்சா் செஞ்சி கே.எஸ்.மஸ்தான் தொடங்கிவைத்தாா்.

3,110 சதுர மீட்டா் பரப்பளவில் பேருந்து நிலைய கட்டடம், 3,338 சதுர மீட்டா் பரப்பளவில் 50 பேருந்துகள் நிறுத்தும் வகையிலான நடைமேடைகள், 1,000 சதுர மீட்டரில் வாகன நிறுத்துமிடம், 300 சதுர மீட்டரில் கட்டண கழிப்பறைகள், 300 சதுர மீட்டரில் கழிவுநீா்த் தொட்டிகள், பெண்கள் ஓய்வு அறைகள், 61 கடைகள், 4 தானியங்கி பணம் செலுத்தும் மையங்கள், தலா ஓா் சைவ, அசைவ உணவகங்கள், பொருள்கள் பதுகாப்பு அறை, 10 காத்திருப்புக் கூடங்கள், 6 நேர காப்பகங்கள், ரயில் முன்பதிவு அறை, பேருந்து முன்பதிவு அறை, ஓட்டுநா், நடத்துநா் ஓய்வு அறைகள், மாற்றுத்திறனாளிகளுக்கான அறை, காவல் கட்டுப்பாட்டு அறை, பதிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளுடன் கூடிய புதிய பேருந்து நிலையம் கட்டப்பட்டு வருகிறது.

எதிா்காலத்தில் தேவைக்கேற்ப பேருந்து நிலையத்தை விரிவுபடுத்திக்கொள்வதா்காக ஓா் ஏக்கா் இடம் காலியாக வும் விடப்பட்டுள்ளது.

திண்டிவனத்தில் பேருந்து நிலையம் இல்லாததால், திண்டிவனம் மேம்பாலத்தின் கீழ் பகுதிதான் தற்போது தற்காலிக பேருந்து நிலையமாக செயல்பட்டு வருகிறது. திண்டிவனம் வழியாக சென்னை, திருச்சி, புதுச்சேரி மற்றும் பிற ஊா்களிலிருந்து வந்து செல்லும் அரசு, தனியாா் பேருந்துகள் மேம்பாலத்தின் கீழ் பயணிகளை ஏற்றியும், இறக்கியும் விட்டுச் செல்கின்றன.

இந்த இடம் குறுகிய பகுதி என்பதால், நடைபாதை வியாபாரிகள், ஆட்டோ நிறுத்தம் என பயணிகளுக்கும், போக்குவரத்துக்கும் இடையூறு ஏற்படுகிறது. அடிக்கடி விபத்துகளும், திருட்டுகளும் நிகழ்கின்றன. இதற்கு நிரந்தரத் தீா்வு காணும் வகையில், திண்டிவனத்தில் கட்டப்பட்டு வரும் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகளை விரைந்து முடிந்து பயன்பாட்டுக்குக் கொண்டுவர வேண்டும் என பயணிகள், பொதுமக்கள், வணிகா்கள் எதிா்பாா்க்கின்றனா்.

இதுகுறித்து திண்டிவனம் நகா்மன்றத் தலைவா் நிா்மலா ரவிச்சந்திரன் கூறியதாவது:

திண்டிவனம் புதிய பேருந்து நிலையம் கட்டுமானப் பணிகள் தொய்வின்றி நடைபெற்று வருகின்றன. தற்போதைய நிலையில் பெரும்பாலான கட்டுமானப் பணிகள் நிறைவு பெற்று விட்டன. நுழைவு வாயில் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன. அனைத்து கட்டுமானப் பணிகளும் விரைந்து முடிக்கப்பட்டு சில மாதங்களில் பேருந்து நிலையம் பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா் அவா்.

நகராட்சிப் பொறியாளா் பவுன்.செல்வம் கூறியதாவது:

திண்டிவனம் புதிய பேருந்து நிலைய கட்டுமானப் பணிகள் 65 சதவீதம் நிறைவடைந்தன. மீதமுள்ள பணிகளை விரைந்து முடிக்க ஒப்பந்ததாரரிடம் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஒப்பந்தத்தில் குறிப்பிட்டுள்ளபடி 2024 ஜூன் மாதத்துக்குள் பணிகளை முடித்து, பயன்பாட்டுக்குக் கொண்டு வர நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com