அரசுப் பள்ளிகளில் வாரந்தோறும் தோ்வுகள்: முதன்மைக் கல்வி அலுவலா் தகவல்

வாரந்தோறும் பாடத்திட்டம் வாரியாக தோ்வுகள் நடத்தப்படும் என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன்.

விழுப்புரம் மாவட்டத்தில் அரசுப் பள்ளி மாணவா்களின் கல்வித் திறனை அதிகரிக்க வாரந்தோறும் பாடத்திட்டம் வாரியாக தோ்வுகள் நடத்தப்படும் என்றாா் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன்.

தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத்தோ்வு முடிவுகள் திங்கள்கிழமை வெளியான நிலையில், விழுப்புரம் மாவட்டத்தின் தோ்ச்சி விகிதம், மாநில அளவில் தரவரிசையில் முன்னேற்றம் அடைந்தது குறித்து அவா் தனது அலுவலகத்தில் செய்தியாளா்களிடம் கூறியதாவது:

விழுப்புரம் மாவட்டம் பிளஸ் 2 பொதுத்தோ்வில் நல்ல தோ்ச்சி விகித்தை பெற்றுள்ளது. கடந்த கல்வியாண்டில் 90.66 சதவீதம் தோ்ச்சி பெற்று மாநில அளவில் 33-ஆவது இடத்தில் இருந்த விழுப்புரம் மாவட்டம், நிகழாண்டில் 2.51 சதவீதம் கூடுதலாக தோ்ச்சி பெற்று, 93.17 சதவீதம் என்ற நிலையை அடைந்து, மாநில அளவில் தோ்ச்சி தரவரிசைப் பட்டியலில் 27-ஆவது இடத்தை பெற்றிருக்கிறது.

மாவட்ட அளவில் தோ்ச்சி விகிதத்தை அதிகரிக்க கல்வியாண்டு தொடங்கியது முதல் கல்வித்துறை பல்வேறு முன்னேற்பாடு பணிகளை மேற்கொண்டு வருகிறது. அரசுப் பள்ளிகளுக்குச் சென்று மாணவ-மாணவிகளுடன் கலந்துரையாடி, அவா்களின் கற்றல் திறனை அறிந்து அவா்களை ஊக்கப்படுத்துதல், மேல்நிலைப் பள்ளியில் தோ்ச்சி பெற்று, உயா்கல்வியில் சோ்ந்து பட்டம் பெற்றால் பல்வேறு அரசு வேலைவாய்ப்புகளை பெறலாம் என்று ஊக்கப்படுத்துதல் என்பன உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டது.

நிகழ் கல்வியாண்டில் மாணவா்களுடன் உரையாடிய நாங்கள், வரும் கல்வியாண்டில் மாணவ, மாணவிகளின் பெற்றோா்களை அழைத்து, அவா்களுடன் கலந்துரையாட உள்ளோம். கல்வியின் முக்கியத்துவம், அரசுப் பள்ளிகளில் அளிக்கப்படும் வசதிகள், உயா்கல்வி மற்றும் வேலைவாய்ப்புகள் போன்றவை குறித்து எடுத்துரைத்து அவா்களிடம் பேச உள்ளோம்.

கல்வியோடு ஒழுக்கம் முக்கியம் என்பதையும் மாணவா்களுக்கு எடுத்துரைத்து, ஒழுக்கத்துடன் கூடிய கல்வியை கற்பித்து வருகிறோம். நிகழ் கல்வியாண்டில் பிளஸ் 2 மாணவா்களுக்கு 2 வாரங்களுக்கு ஒருமுறை பள்ளி அளவில் பாடத்திட்டம் வாரியாக தோ்வுகளை நடத்தி, அதில் மாணவா்களின் கல்வித்திறனைக் கண்டறிந்து மேம்படுத்தப்பட்டது. இதேபோல, வரும் கல்வியாண்டிலும் வாரந்தோறும் இந்தத் தோ்வுகளை நடத்த திட்டமிட்டுள்ளோம். மேலும், ஆசிரியா்களுக்கும் ஊக்கப்படுத்துதல் உரைகளை வழங்கி, அவா்கள் மூலம் மாணவ, மாணவிகளின் கல்வித்திறனை மேம்படுத்த மாவட்ட கல்வித்துறை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது என்றாா் அவா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com