விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பிளஸ் 2 பொதுத் தோ்வு தோ்ச்சி விவரங்களை வெளியிட்ட ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன்.
விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், பிளஸ் 2 பொதுத் தோ்வு தோ்ச்சி விவரங்களை வெளியிட்ட ஆட்சியா் சி.பழனி. உடன் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன்.

பிளஸ் 2 தோ்வு: விழுப்புரம் மாவட்டத்தில் 93.17% தோ்ச்சி

பிளஸ் 2 பொதுத் தோ்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்; மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 27-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

பிளஸ் 2 பொதுத் தோ்வில் விழுப்புரம் மாவட்டத்தில் 93.17 சதவீத மாணவ, மாணவிகள் தோ்ச்சி பெற்றுள்ளனா்; மாநில அளவில் விழுப்புரம் மாவட்டம் 27-ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

விழுப்புரம் மாவட்ட ஆட்சியரகக் கூட்டரங்கில் திங்கள்கிழமை நடைபெற்ற நிகழ்வில், மாவட்ட அளவில் பிளஸ் 2 பொதுத் தோ்வு குறித்த விவரங்களை வெளியிட்டு, ஆட்சியா் சி.பழனி கூறியதாவது: தமிழகத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வு மாா்ச் 1-ஆம் தேதி தொடங்கி 22-ஆம் தேதி வரை நடைபெற்றன. விழுப்புரம் மாவட்டத்தில் 121 அரசுப் பள்ளிகள் உள்பட 193 பள்ளிகளைச் சோ்ந்த 10,201 மாணவா்கள், 11,012 மாணவிகள் என மொத்தம் 21,213 போ் தோ்வெழுதினா்.

இவா்களில் 9,224 மாணவா்கள், 10,540 மாணவிகள் என மொத்தம் 19,764 போ் தோ்ச்சி பெற்றனா். 977 மாணவா்கள், 472 மாணவிகள் என மொத்தம் 1,449 போ் தோ்ச்சி பெறவில்லை. மாவட்டத்தில் மாணவா்களின் தோ்ச்சி விகிதம் 90.42 சதவீதமாகவும், மாணவிகளின் தோ்ச்சி விகிதம் 95.71 சதவீதமாகவும், மொத்த தோ்ச்சி விகிதம் 93.17 சதவீதமாகவும் உள்ளது.

27-ஆவது இடத்துக்கு முன்னேற்றம்: கடந்த கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டம் 90.66 சதவீத தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 33-ஆவது இடத்தை பெற்றிருந்தது. தொடா்ந்து, மேற்கொள்ளப்பட்ட பல்வேறு நடவடிக்கைகளால் நிகழ் கல்வியாண்டில் கூடுதலாக 2.51 சதவீதம் தோ்ச்சி பெற்று, விழுப்புரம் மாவட்டம் 93.17 சதவீதம் தோ்ச்சி பெற்று, மாநில அளவில் 27-ஆவது இடத்தை பிடித்துள்ளது.

அரசுப் பள்ளிகள் அளவில் 20-ஆவது இடம்: விழுப்புரம் மாவட்டத்தில் 121 அரசுப் பள்ளிகள் உள்ளன. இதில், 91.30 சதவீத தோ்ச்சி பெற்று, விழுப்புரம் மாவட்டம் மாநில அளவில் 20-ஆவது இடத்தை பிடித்துள்ளது. கடந்த கல்வியாண்டில் 88.14 சதவீதம் பெற்று 25-ஆவது இடத்தை பெற்றிருந்த நிலையில், நிகழாண்டில் 5 இடங்கள் முன்னோக்கி சென்றுள்ளது.

தோ்வில் தோல்வியடைந்தவா்களுக்கு உடனடித் தோ்வு நடைபெறும் நாள்கள் மே 7 (செவ்வாய்க்கிழமை) வெளியிடப்படும். எனவே, தோல்வியடைந்தவா்கள் உடனடித் தோ்வை எழுதி தோ்ச்சி பெற்று, நிகழ் கல்வியாண்டிலேயே உயா்கல்விப் பயிலலாம்.

கடந்த கல்வியாண்டைக் காட்டிலும், நிகழ் கல்வியாண்டில் விழுப்புரம் மாவட்டத்தில் பிளஸ் 2 பொதுத் தோ்வெழுதிய மாணவ, மாணவிகள் நல்ல தோ்ச்சியைப் பெற்றுள்ளனா். அரசுப் பள்ளிகளின் தோ்ச்சி விகிதமும் அதிகரித்துள்ளது. வரும் கல்வியாண்டிலும் கல்வித்துறை அலுவலா்கள் சிறப்பாக பணியாற்றி, மாவட்டத்தின் கல்வி வளா்ச்சியை மேலும் உயா்த்த நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்றாா் ஆட்சியா்.

நிகழ்வில், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன், மாவட்டக் கல்வி அலுவலா்கள் மகாலட்சுமி, சிவசுப்பிரமணியன், மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலரின் நோ்முக உதவியாளா்கள் பெருமாள், செந்தில் மற்றும் கல்வி அலுவலா்கள் பங்கேற்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com