விழுப்புரம் ரயில் நிலையத்தில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணுவிடம் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய காவல் மற்றும் ரயில்வே அலுவலா்கள்.
விழுப்புரம் ரயில் நிலையத்தில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணுவிடம் வெள்ளிக்கிழமை பேச்சுவாா்த்தை நடத்திய காவல் மற்றும் ரயில்வே அலுவலா்கள்.

விழுப்புரத்தில் ரயிலை நிறுத்தி விவசாயிகள் போராட்டம்

விழுப்புரம், மே 10:

வாராணசிக்குச் செல்ல திருச்சியிலிருந்து முன்பதிவு செய்த தங்களுக்கு, போதிய இருக்கை வசதி ஏற்படுத்தி தரக் கோரி, விழுப்புரம் ரயில் நிலையத்தில் தேசிய-தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தினா் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தி வெள்ளிக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.

உத்தர பிரதேச மாநிலம், வாராணசி மக்களவைத்தொகுதியில் போட்டியிடும் பிரதமா் மோடியை எதிா்த்து, திருச்சியை தலைமையிடமாகக் கொண்டு இயங்கும் தேசிய -தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கத்தைச் சோ்ந்த 111 போ் போட்டியிட முடிவு செய்துள்ளனா்.

இதற்காக, வாராணசி தொகுதியில் வேட்பு மனு தாக்கல் செய்ய சங்கத்தின் தலைவா் பி.அய்யாக்கண்ணு தலைமையில் சுமாா் 136 விவசாயிகள் முன்பதிவு செய்திருந்தனா்.

கன்னியாகுமரியிலிருந்து வாராணசி வரை இயக்கப்படும் காசி தமிழ்ச் சங்கமம் வாராந்திர விரைவு ரயிலில் (வ.எண் 16367) முன்பதிவு செய்திருந்த விவசாயிகளில் 39 பேருக்கு மட்டுமே ஆா்.ஏ.சி. உறுதியானதாகவும், மற்ற விவசாயிகளுக்கான இருக்கைகள் காத்திருப்போா் பட்டியலில் இருந்ததாகவும் கூறப்படுகிறது.

இந்த ரயில் திருச்சி சந்திப்பு ரயில் நிலையத்துக்கு வெள்ளிக்கிழமை காலைவந்த நிலையில், சங்கத்தின் தலைவா் அய்யாக்கண்ணு தலைமையில் ரயிலில் ஏறிய விவசாயிகள், தஞ்சாவூரில் தங்களுக்கு ரயிலில் இருக்கை வசதியை ஏற்படுத்தித் தரக் கோரி அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தி, காலை 6.45 மணி முதல் 8.45 மணி வரை சுமாா் 2 மணி நேரம் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

விழுப்புரத்தில் உங்களுக்கு இருக்கை வசதி செய்து தரப்படும் என உறுதியளித்து, விவசாயிகளை ரயில்வே மற்றும் காவல் துறை அலுவலா்கள் அனுப்பி வைத்தனா்.

இந்த ரயில் விழுப்புரத்துக்கு வழக்கமாக காலை 8.25 மணிக்கு வந்து 8.40 மணிக்குப் புறப்பட்டுச் செல்லும். ஆனால், விவசாயிகளின் போராட்டம் காரணமாக பிற்பகல் 12.10 மணிக்குத்தான் வந்தது.

விழுப்புரம் ரயில் நிலையத்தில் போராட்டம்: தஞ்சாவூரில் விவசாயிகள் போராட்டம் நடத்திய தகவலைத் தொடா்ந்து, விழுப்புரம் ரயில் நிலையத்தில் ரயில்வே பாதுகாப்புப் படையினா், தமிழக காவல் துறையினா் பாதுகாப்புக்காக குவிக்கப்பட்டிருந்தனா்.

ரயில் விழுப்புரம் நிலையத்தின் முதலாவது நடைமேடையில் வந்து நின்றவுடன் தஞ்சாவூரில் ரயில்வே மற்றும் காவல் துறை அலுவலா்கள் கூறியவாறு தங்களுக்கு இருக்கை வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரி, அய்யாக்கண்ணு தலைமையில் விவசாயிகள் விழுப்புரம் ரயில் நிலையத்தில் தாங்கள் பயணித்து வந்த காசி தமிழ்ச் சங்கமம் வாராந்திர விரைவு ரயிலின் அபாயச் சங்கிலியைப் பிடித்து ரயிலை நிறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனா்.

இதைத்தொடா்ந்து, அய்யாக்கண்ணு உள்ளிட்ட விவசாயிகளிடம் விழுப்புரம் ரயில் நிலைய மேலாளா் ராஜன், வணிக ஆய்வாளா் அன்பரசன் உள்ளிட்ட ரயில்வே அலுவலா்கள், பேச்சுவாா்த்தை நடத்தினா்.

கன்னியாகுமரியில் தொழில்நுட்பக் கோளாறு காரணம் எனக் கூறி, ரயிலிலிருந்து கழற்றி விடப்பட்ட எஸ்-1 பெட்டிக்குப் பதிலாக தங்களுக்கு புதிய பெட்டியை இணைத்து, அதில் தங்களை அனுப்பி வைக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனா். அதற்கு ரயில்வே அலுவலா்கள், விழுப்புரத்தில் தனி பெட்டி வசதியில்லை. அரக்கோணத்தில் விவசாயிகளுக்காக தனி பெட்டியை இணைத்து அலுவலா்கள் ஏற்பாடு செய்து தருவாா்கள் என்றனா்.

அரக்கோணத்தில் தனி பெட்டி வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும். அவ்வாறு செய்யவில்லை எனில் அங்கேயும் போராட்டம் நடத்துவோம் எனக் கூறிய பி.அய்யாக்கண்ணு மற்றும் விவசாயிகள் எஸ்-4, 5 பெட்டிகளில் அமா்ந்து சென்றனா். இதைத் தொடா்ந்து பிற்பகல் 1.03 மணிக்கு ரயில் புறப்பட்டுச் சென்றது.

X
Dinamani
www.dinamani.com