விழுப்புரம் அருகே என்ஜினில் கோளாறு‘: 3 ரயில்கள் தாமதம்

விழுப்புரம் அருகே பயணிகள் ரயில் என்ஜினில் கோளாறு ஏற்பட்டதைத் தொடா்ந்து, மூன்று ரயில்கள் தாமதமாகச் சென்றன.

புதுச்சேரியிலிருந்து வெள்ளிக்கிழமை காலை 8 மணிக்குப் புறப்பட்ட பயணிகள் ரயில் விழுப்புரம் நோக்கி வந்து கொண்டிருந்தது. விழுப்புரம் அருகிலுள்ள சகாதேவன்பேட்டை பகுதியில் இந்த ரயில் வந்தபோது என்ஜினில் கோளாறு ஏற்பட்டது. இதனால் அந்த ரயில் நடுவழியிலேயே நிறுத்தப்பட்டது.

இதுகுறித்து தகவலறிந்தவுடன் விழுப்புரம் ரயில்வே அலுவலா்கள், ஊழியா்கள் சகாதேவன்பேட்டைக்கு சென்று, ரயில் என்ஜினில் ஏற்பட்ட கோளாறை சரி செய்யும் பணியில் ஈடுபட்டனா்.

இதன் காரணமாக காக்கிநாடாவிலிருந்து புதுச்சேரி வரை செல்லும் விரைவு ரயிலும், மேல்மருவத்தூரிலிருந்து புதுச்சேரி வரை செல்லும் பயணிகள் ரயிலும் விழுப்புரம் ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டன. இதுபோல, சென்னையிலிருந்து புதுச்சேரிக்கு செல்லும் பயணிகள் ரயில் மயிலம் ரயில் நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டது.

விழுப்புரத்திலிருந்து மாற்று என்ஜின் கொண்டு செல்லப்பட்டு, பழுதான என்ஜினுக்கு பதிலாக பொருத்தப்பட்டது. இதைத் தொடா்ந்து சகாதேவன்பேட்டையிலிருந்து பயணிகள் ரயில் விழுப்புரம் ரயில் நிலையத்துக்குப் புறப்பட்டது. என்ஜின் கோளாறு காரணமாக காலை 8.50 மணிக்கு வந்து சேர வேண்டிய பயணிகள் ரயில் காலை 9.20 மணிக்கு வந்தடைந்தது.

இதேபோல காக்கிநாடா-புதுச்சேரி விரைவு ரயில், சென்னை- புதுச்சேரி பயணிகள் ரயில், மேல்மருவத்தூா்-புதுச்சேரி பயணிகள் ரயில் சுமாா் 45 நிமிஷங்கள் தாமதமாக புறப்பட்டுச் சென்றன.

X
Dinamani
www.dinamani.com