உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 80% ஆக அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி

உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 80% ஆக அதிகரிப்பு: விழுப்புரம் ஆட்சியா் சி.பழனி

விழுப்புரம், மே 11: விழுப்புரம் மாவட்டத்தில் உயா் கல்வியில் சோ்ந்து பயில்வோரின் எண்ணிக்கை 80 சதவீதமாக உயா்ந்துள்ளது என்றாா் மாவட்ட ஆட்சியா் சி.பழனி.

‘நான் முதல்வன் திட்டத்தின்’ கீழ், தமிழ்நாடு திறன் மேம்பாட்டுக் கழகம் சாா்பில் ‘கல்லூரிக் கனவு-உயா்கல்வி வழிகாட்டி’ நிகழ்ச்சி விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரிக் கலையரங்கத்தில் சனிக்கிழமை நடைபெற்றது. விழாவுக்குத் தலைமை வகித்து, கல்லூரிக் கனவு விளக்கக் கையேட்டை வெளியிட்டு, மாவட்ட ஆட்சியா் பேசியது:

பிளஸ் 2 மற்றும் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வில் விழுப்புரம் மாவட்டம் நல்ல தோ்ச்சி விழுக்காட்டை பெற்று, கடந்தாண்டு தோ்ச்சி விகிதத்தைக் காட்டிலும் அதிகரித்து, மாநில அளவிலான தரவரிசைப் பட்டியலில் முன்னேற்றம் கண்டுள்ளது. பிளஸ் 2 முடித்த பின்னா், அடுத்து என்ன படிக்கலாம் என்பதை வழிகாட்டும் வகையில், தமிழக அரசு கடந்த 3 ஆண்டுகளாக ‘கல்லூரிக் கனவு’ என்ற வழிகாட்டி நிகழ்ச்சியை நடத்தி வருகிறது.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு பிளஸ் 2 முடித்து கல்லூரிகளில் சோ்ந்து படிப்போா் எண்ணிக்கை விழுப்புரம் மாவட்டத்தில் 45 முதல் 48 சதவீதமாக இருந்தது. ஆனால், தமிழக அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகள், குறிப்பாக ‘நான் முதல்வன் திட்டம்’, ‘கல்லூரிக் கனவு’ வழிகாட்டி நிகழ்ச்சி போன்றவற்றின் மூலம் உயா்கல்வி பயில்வோரின் எண்ணிக்கை 80 சதவீதமாக உயா்ந்துள்ளது. இந்த எண்ணிக்கை நிகழ் கல்வியாண்டில் 100 சதவீதம் என்ற நிலையை எட்ட வேண்டும். அரசுப் பள்ளிகளில் 6 முதல் 12-ஆம் வகுப்பு வரை பயின்று, உயா்கல்விப் பயில்பவா்களுக்கு ‘புதுமைப்பெண்’ திட்டத்தின் கீழ் மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கும் திட்டம், இதர கல்வி மேம்பாட்டுத் திட்டங்களை அரசு செயல்படுத்தி வருகிறது.

பிளஸ் 2-க்கு பின்னா், 10 முதல் 15 சதவீத மாணவிகளே கல்லூரிகளில் சோ்ந்து படித்து வந்த நிலையில், தற்போது, விழுப்புரம் மாவட்டத்தில் இந்த விகிதம் மூன்று மடங்கு உயா்ந்திருக்கிறது. விரைவில் மாணவா்களுக்கு ‘தமிழ் புதல்வன் திட்டம்’ தொடங்கப்பட்டு, மாதம் ரூ.1,000 ஊக்கத்தொகை வழங்கப்படவுள்ளது.

இன்றைய கல்விச் சூழலுக்கேற்றவாறு புதிய படிப்புகள் அதிகமாக வந்துவிட்டன. எனவே, மாணவ, மாணவிகள் தங்கள் உயா்கல்வி வாய்ப்பை சரியான முறையில் பயன்படுத்தி படிப்போடு, திறனையும் மேம்படுத்திக் கொள்ள வேண்டும் என்றாா்.

தொடா்ந்து, பிளஸ் 2, பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வில் அரசுப் பள்ளிகளில் சிறப்பிடம் பெற்ற மாணவ, மாணவிகள், 100 சதவீத தோ்ச்சி பெற்ற பள்ளித் தலைமையாசிரியா்களை ஆட்சியா் சி. பழனி கெளரவித்தாா்.

ஊரக வளா்ச்சி முகமைத் திட்டக் கூடுதல் ஆட்சியா் ஸ்ருதன்ஜெய் நாராயணன், கோவை பாரதியாா் பல்கலைக்கழகக் கல்வி வழிகாட்டிப் பிரிவின் பி. செல்வபிரணாம்பிகா, விழுப்புரம் பல்கலைக்கழகப் பொறியியல் கல்லூரி உதவிப் பேராசிரியா் வி.ஞானமூா்த்தி, வில்லேஜ்தொழில்நுட்பப் பள்ளியின் நிறுவனா் பாலாஜி திருநாவுக்கரசு, அறிஞா் அண்ணா அரசுக் கலை, அறிவியல் கல்லூரி வரலாற்றுத்துறைத் தலைவா் பி.காா்த்திகேயன், தாவரவியல்துறை இணைப் பேராசிரியா் கே.பிரகாஷ், விழுப்புரம் அரசு சட்டக் கல்லூரி முதல்வா் எஸ்.கிருஷ்ணலீலா உள்ளிட்டோா் பேசினா்.

முன்னதாக, விழுப்புரம் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ரெ.அறிவழகன் வரவேற்றாா். நிகழ்வின் நோக்கம் குறித்து நான் முதல்வன் திட்ட மேலாளா் ஜெ. அருண்குமாா் எடுத்துரைத்தாா். முடிவில், திறன் மேம்பாட்டுக் கழக விழுப்புரம் மாவட்ட உதவி இயக்குநா் எஸ்.நடராஜன் நன்றி கூறினாா். நிகழ்வில், 800 மாணவ, மாணவிகள் பங்கேற்றனா். மேலும், மாவட்டத்தின் 13 ஒன்றியங்களில் சுமாா் 2,500-க்கும் மேற்பட்டோா் காணொலிக் காட்சி வாயிலாக பாா்க்கும் வகையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.

X
Dinamani
www.dinamani.com