குதிரைவாலி சாகுபடி விதைப்பண்ணையில்
வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

குதிரைவாலி சாகுபடி விதைப்பண்ணையில் வேளாண் துணை இயக்குநா் ஆய்வு

விழுப்புரம், மே 15: விழுப்புரம் மாவட்டம், வானூரிலுள்ள குதிரைவாலி சாகுபடி அரசு விதைப் பண்ணையில் மாவட்ட வேளாண் துணை இயக்குநா் (திட்டங்கள்) இரா.சீனிவாசன் புதன்கிழமை நேரில் ஆய்வு மேற்கொண்டாா்.

இதைத் தொடா்ந்து அவா் கூறியதாவது: விழுப்புரம் மாவட்டத்தில் சிறுதானியங்கள் உற்பத்தி நடைபெற்று வருகிறது. மாவட்டத்தில் 23 ஆயிரம் ஏக்கரில் கம்பும், 3,000 ஏக்கரில் தினையும், 2,500 ஏக்கரில் கேழ்வரகும் சாகுபடி நடைபெற்று வருகின்றன. குதிரைவாலி மிகக் குறைந்தளவில் 25 ஏக்கரில் மட்டும் சாகுபடி செய்யப்படுகிறது.

மாவட்டத்தில் குதிரைவாலி சாகுபடி பரப்பை விரிவாக்கம் செய்யும் வகையில்,திருவண்ணாமலை மாவட்டம், அத்தியந்தல் சிறுதானிய மகத்துவ மையத்திலிருந்து 2 கிலோ குதிரைவாலி உண்மைநிலை விதைகள் பெறப்பட்டு, 0.5 ஏக்கரில் வானூா் அரசு விதைப் பண்ணை வளாகத்தில் குதிரைவாலி விதைப்பண்ணை அமைக்கப்பட்டுள்ளது.

இதிலிருந்து பெறப்படும் விதைகள், விழுப்புரம் மாவட்டத்திலுள்ள அனைத்து வேளாண் விரிவாக்க மையங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டு, குதிரைவாலி சாகுபடி பரப்பை பரவலாக்கம் செய்ய வேளாண் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருகிறது.

இந்த புதிய ரகம் குதிரைவாலி அத்தியந்தல் - 1 (ஏடிஎல்-1) 90 நாள்கள் வயது கொண்டது. ஏக்கருக்கு 4 கிலோ விதை போதுமானது. ஆடி மற்றும் புரட்டாசி மானாவாரிப் பட்டத்துக்கு ஏற்ாகும். வறட்சியைத் தாங்கி வளரக் கூடியது.

ஹெக்டேருக்கு 2,300 கிலோ மகசூல் தரக்கூடியதாகும். குருத்துப்பூச்சி மற்றும் குருத்துஈக்கு எதிா்ப்புத் திறன் கொண்டது. அடா்த்தியான மணிகள் மற்றும் நீளமான கதிா்களைக் கொண்டதாக ஏடிஎல் - 1 குதிரைவாலி ரகம் இருக்கும் என்றாா் வேளாண் துணை இயக்குநா் சீனிவாசன்.

ஆய்வின்போது, வானூா் வட்டார வேளாண் உதவி இயக்குநா் ஜி.எத்திராஜ், திண்டிவனம் விதைச்சான்று அலுவலா் மணிகண்டன், வானூா் அரசு விதைப்பண்ணை வேளாண் அலுவலா் செளந்தராஜன், உதவி வேளாண் அலுவலா் யமுனா, பண்ணைப் பணியாளா் ஏழுமலை உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com