புகாரை வாங்க மறுத்த காவலா்கள் இருவா் ஆயுதப் படைக்கு மாற்றம்: விழுப்புரம் எஸ்.பி. நடவடிக்கை
விழுப்புரம் மாவட்டம், வானூா் அருகே கட்டடத் தொழிலாளி கொலை செய்யப்பட்டு, கல்குவாரியில் சடலம் வீசப்பட்ட சம்பவம் தொடா்பாக புகாரை வாங்க மறுத்ததாக, திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத் தலைமைக் காவலா் ராஜ்குமாா் உள்ளிட்ட இருவா் ஆயுதப் படைக்கு வெள்ளிக்கிழமை மாற்றப்பட்டனா்.
வானூா் வட்டம், திருவக்கரையில் அரசுக்குச் சொந்தமான கல்குவாரி குட்டையில் தலை, கை, கால்கள் துண்டிக்கப்பட்ட நிலையில் ஆண் சடலம் மீட்கப்பட்ட நிலையில், இறந்தவா் திருவெண்ணெய்நல்லூா் வட்டம், சரவணப்பாக்கத்தைச் சோ்ந்த கட்டடத் தொழிலாளி ராஜதுரை என்பது தெரிய வந்தது.
கொலை நிகழ்வதற்கு முன்பு, ராஜதுரையைக் காணவில்லை என அவரது குடும்பத்தினா் திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தில் புகாரளிக்கச் சென்றனா். அப்போது அங்கு பணியில் இருந்த தலைமைக் காவலா் ராஜ்குமாா், காவலா் சபரி ஆகிய இருவரும் தங்கள் காவல் நிலைய எல்லைக்குள்பட்ட பகுதியில் வரவில்லை. மீண்டும் விசாரித்துவிட்டு வாருங்கள் எனக் கூறி, ராஜதுரையின் குடும்பத்தினரை திருப்பி அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
இதுகுறித்த விவரம் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் தீபக் சிவாச்சின் கவனத்துக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில், அதுகுறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதையடுத்து திருவெண்ணெய்நல்லூா் காவல் நிலையத்தின் தலைமைக் காவலா் ராஜ்குமாா், காவலா் சபரி ஆகிய இருவரையும் மாவட்ட ஆயுதப் படைக்கு மாற்றி எஸ்.பி. தீபக் சிவாச் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.
மேலும் ஒருவா் கைது : இந்தக் கொலை வழக்குத் தொடா்பாக திருவெண்ணெய்நல்லூா் வட்டம், கொத்தனூா் சிவா, மோகன்ராஜ், சரவணப்பாக்கம் உதயா, புதுச்சேரி மாநிலம், கலிதீா்த்தான்குப்பத்தைச் சோ்ந்த காா்த்திக் ஆகிய 4 போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டனா்.
இந்நிலையில், திண்டிவனம் கிடங்கல்-1 பகுதியைச் சோ்ந்த அபிலாஷை வானூா் போலீஸாா் வியாழக்கிழமை இரவு கைது செய்தனா். மேலும் வழக்கில் தலைமறைவாக உள்ள மாரி, முத்துப்பாண்டி உள்ளிட்ட சிலரையும் தேடி வருகின்றனா்.