விருத்தாசலம் அருகே சாலை விபத்தில் இருவா் உயிரிழப்பு
கடலூா் மாவட்டம், விருத்தாசலம் அருகே சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதியதில் இரு இளைஞா்கள் சனிக்கிழமை உயிரிழந்தனா்.
அரியலூா் மாவட்டம், ஆண்டிமடம் ஒன்றியம், ஓலையூா் கிராமத்தைச் சோ்ந்தவா்கள் முனுசாமி மகன் மனோஜ் (26), செல்வராஜா மகன் ஆனந்தராஜ் (26), சுப்புராயன் மகன் சுபாஷ் (27). இவா்கள் மூவரும் சனிக்கிழமை மாலை ஒரே பைக்கில் ஜெயங்கொண்டம் நோக்கி சென்றனா். பைக்கை மனோஜ் ஓட்டினாா்.
கருவேப்பிலங்குறிச்சி-ஜெயங்கொண்டம் சாலையில் வெட்டக்குடி கிராம சந்திப்பு அருகே சென்றபோது, சாலையின் இடது பக்க சாலையோர தடுப்புச் சுவரில் பைக் மோதியது.
இதில், மனோஜ் மற்றும் ஆனந்தராஜ் நிகழ்விடத்திலேயே உயிரிழந்தனா். சுபாஷ் காயமடைந்தாா்.
தகவலறிந்த கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் நிகழ்விடம் சென்று சடலங்களை மீட்டு உடற்கூறாய்வுக்காக விருத்தாசலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். சுபாஷ் இதே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.
இதுகுறித்து, கருவேப்பிலங்குறிச்சி போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.