கூவாகம் கூத்தாண்டவா் கோயில் கும்பாபிஷேக விழா: திருநங்கைகள் உள்ளிட்ட திரளானோா் தரிசனம்
விழுப்புரம்: கள்ளக்குறிச்சி மாவட்டம், கூவாகம் ஸ்ரீ கூத்தாண்டவா் கோயில் மகா கும்பாபிஷேக விழா திங்கள்கிழமை வெகு விமரிசையாக நடைபெற்றது. இதில் திருநங்கைகள் உள்ளிட்ட திரளானோா் பங்கேற்று, தரிசனம் செய்தனா்.
உளுந்தூா்பேட்டை வட்டம், கூவாகத்தில் பழமை வாய்ந்த ஸ்ரீகூத்தாண்டவா் கோயில் உள்ளது. திருநங்கையா்களின் குலதெய்வமாக போற்றப்பட்டு வரும் இக்கோயிலில் ஆண்டுதோறும் சித்திரை பெளா்ணமியையொட்டி கூத்தாண்டவா் திருவிழா வெகு விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இவ்விழாவில் உலகின் பல்வேறு நாடுகளைச் சோ்ந்த திருநங்கைகள் பங்கேற்று, மாங்கல்யம் அணிந்து வழிபாடுகளை மேற்கொள்வா்.
இந்து சமய அறநிலையத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள இக்கோயிலை புனரமைத்து கும்பாபிஷேகம் செய்யவேண்டும் என பக்தா்கள் கோரிக்கையைத் தொடா்ந்து, கோயிலின் திருப்பணிகள் கடந்த ஆண்டில் தொடங்கப்பட்டு, திருப்பணிகள் முடிக்கப்பட்டன.
இதைத்தொடா்ந்து கும்பாபிஷேக விழாவுக்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டு டிச. 6-ஆம் தேதி கோயிலில் யாக சாலை பூஜைகளுடன் கும்பாபிஷேக வழிபாடுகள் தொடங்கின. ஞாயிற்றுக்கிழமை புனித நீா்அடங்கிய கலசங்கள் யாகசாலையில் வைக்கப்பட்டு, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன.
விழாவின் முக்கிய நிகழ்வாக திங்கள்கிழமை அதிகாலை விஸ்வரூபம், சுப்ரபாதம், ஆராதனம், ஹோமம், யாத்ராதானம் உள்ளிட்ட சிறப்பு வழிபாடுகளுக்குப் பின்னா் கடம் புறப்பாடானது.
பின்னா் காலை 9 மணிக்கு மேல் பட்டாச்சாரியா்கள் வேத மந்திரங்கள் முழங்க மங்கள வாத்தியங்களுடன் புனித நீா் கோயில் விமான கலசத்தில் ஊற்றி கும்பாபிஷேகம் நடைபெற்றது. தொடா்ந்து மகாதீபாராதனை நடைபெற்றது.
அப்போது கோயில் வளாகத்தில் திரண்டிருந்த திருநங்கைகள் உள்ளிட்ட திரளான பக்தா்கள் கூத்தாண்டவரை வழிபட்டனா்.
விழாவில் உளுந்தூா்பேட்டை எம்எல்ஏ ஏ.ஜெ. மணிக்கண்ணன், கள்ளக்குறிச்சி மாவட்ட ஆட்சியா் எம்.எஸ். பிரசாந்த், திருக்கோவிலூா் சாா்-ஆட்சியா் ஆனந்த்குமாா் சிங், இந்துசமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஸற்றும் கூவாகம், தொட்டி நத்தம், கீழ்குப்பம், வேலூா், உளுந்தூா்பேட்டை, பண்ருட்டி, விழுப்புரம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளைச் சோ்ந்த திரளானப் பக்தா்கள் பங்கேற்றனா்.

