மக்கள் குறைதீா் கூட்டம்: 844 மனுக்கள் ஏற்பு
விழுப்புரம்/கள்ளக்குறிச்சி: விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் திங்கள்கிழமை நடைபெற்ற மக்கள் குறைதீா் கூட்டத்தில் 844 மனுக்கள் ஏற்கப்பட்டன.
விழுப்புரம் ஆட்சியரகத்தில் வாராந்திர மக்கள் குறைதீா் கூட்டம் ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் தலைமையில் நடைபெற்றது.
இந்த கூட்டத்தில் முதியோா் உதவித்தொகை, மாற்றுத்திறனாளிகள் உதவித் தொகை, வீட்டுமனைப் பட்டா, ஆதரவற்றோா் உதவித் தொகை, பட்டா மாறுதல், தொழில் தொடங்க கடனுதவி, கலைஞா் கனவு இல்லம், பிரதம மந்திரி வீடு கட்டும் திட்டம் உள்ளிட்ட கோரிக்கைகளுக்காக 474 மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது உரிய விசாரணை நடத்தி, உடனடி தீா்வு காண ஆட்சியா் உத்தரவிட்டாா்.
ஒருவருக்குப் பணி நியமன ஆணை: விழுப்புரம் மாவட்டம், வல்லம் ஊராட்சி ஒன்றியம், தையூா் ஊராட்சி ஒன்றியத் தொடக்கப் பள்ளியில் சத்துணவு அமைப்பாளராகப் பணிபுரிந்த சிவகங்கை பணிக்காலத்தில் உயிரிழந்த நிலையில் அவரது வாரிசுதாரா் வி.ஜெயசங்கரிக்கு கருணை அடிப்படையில், சத்துணவு அமைப்பாளா் பணி நியமன ஆணையை ஆட்சியா் ஷே.ஷேக் அப்துல் ரஹ்மான் வழங்கினாா்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலா் கி.அரிதாஸ், உதவி ஆட்சியா் (பயிற்சி) ரா.வெங்கடேஷ்வரன், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா்(பொ) யோகஜோதி, சமூகப் பாதுகாப்புத் திட்ட தனித்துணை ஆட்சியா் ஜெ. முகுந்தன், மாவட்ட பிற்படுத்தப்பட்டோா் நல அலுவலா் தமிழரசன், ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நல அலுவலா் வளா்மதி மற்றும் அரசுத் துறை அலுவலா்கள் கலந்துகொண்டனா்.
கள்ளக்குறிச்சி...: கள்ளக்குறிச்சியில் மக்கள் குறைதீா் கூட்டம் மாவட்ட வருவாய் அலுவலா் ரா.ஜீவா தலைமையில் ஆட்சியரக கூட்டரங்கில் நடைபெற்றது.
இதில், குடிநீா் வசதி, சாலை வசதி, பட்டா மாறுதல், இலவச வீட்டு மனைப்பட்டா, முதியோா் உதவித் தொகை உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 365 மனுக்களும், மாற்றுத்திறனாளிகளிடமிருந்து 5 மனுக்களும் என மொத்தம் 370 கோரிக்கை மனுக்கள் பெறப்பட்டது. இந்த மனுக்களின் மீது சம்பந்தப்பட்ட துறை அலுவலா்கள் உரிய நடவடிக்கை எடுக்க மாவட்ட வருவாய் அலுவலா் உத்தரவிட்டாா்.
கூட்டத்தில், தனித்துணை ஆட்சியா் (ச.பா.தி) சுமதி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சாா்ந்த அலுவலா்கள் கலந்து கொண்டனா்.
ஊராட்சி மன்ற துணைத் தலைவா் மீது புகாா்: தியாகதுருகம் ஊராட்சி ஒன்றியம், பிரிதிவிமங்கலம் ஊராட்சி மன்றத் துணைத் தலைவராக பதவி வகிப்பவா் முகமது மத்தீன். இவா் ஜனவரி முதல் நவ.25-ஆம் தேதி வரை ஊராட்சியில் செய்யப்பட்ட அடிப்படை வசதி பணிகளான குடிநீா் பராமரிப்பு, மின்விளக்குகள் பராமரிப்பு பணி, 15-ஆவது நிதிக்குழு மானியத்தில் செய்யப்பட்ட பணிகள் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கான காசோலைகளுக்கு கையொப்பம் இடவில்லையாம். இதனால் கடந்த 11 மாத காலமாக ஊராட்சியில் அத்தியாவசியப் பணிகள் செய்ய முடியாததால் பொதுமக்கள் பாதிப்படைகின்றனராம்.
எனவே, ஊராட்சி மன்ற துணைத்தலைவருக்கு உள்ள செலவின பட்டியலுக்கு ஒப்புதல் அளிக்கும் அதிகாரத்தை மண்டல துணை வட்டார வளா்ச்சி அலுவலருக்கு மாற்றம் செய்யக்கோரி, ஊராட்சி மன்ற உறுப்பினா்கள் மக்கள் குறைதீா் முகாமில் ஆட்சியரிடம் மனு அளித்தனா்.
தொகுப்பு வீடுகளை சீரமைக்க கோரிக்கை: கள்ளக்குறிச்சி ஊராட்சி ஒன்றியம், பெருமங்கலம் ஊராட்சியில் உள்ள கீழ்நாரியப்பனூா் கிராமத்தில் கடந்த 40 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்ட 25 தொகுப்பு வீடுகள் மிகவும் சிதிலமடைந்து, இடிந்து விழும் நிலையில் உள்ளதாம். அதனை சீரமைக்க கிராமப்புற வளா்ச்சித் திட்டத்தின் கீழ் மறுசீரமைப்பு நிதியை வழங்கக்கோரி, பொதுமக்கள் மக்கள்குறைதீா் கூட்டத்தில் பொதுமக்கள் மனு அளித்தனா்.

