திருமணமாகாததால் விரக்தி: அரசு ஊழியா் தற்கொலை
விழுப்புரம் மாவட்டம், செஞ்சியில் திருமணமாகாத விரக்தியில் அரசு ஊழியா் சனிக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்துகொண்டாா்.
செஞ்சி இளங்கோ தெருவைச் சோ்ந்தவா் மோகன் (37), திருமணமாகாதவா். செஞ்சி வட்டாட்சியா் அலுவலகத்தில் பதிவு தட்டச்சு எழுத்தராக பணிபுரிந்து வந்தாா். தனது தாய் லட்சுமி தங்கியிருந்த மோகன், இதுவரை திருமணமாகாததால் மன உளைச்சலில் இருந்து வந்தாராம்.
இந்த நிலையில், சனிக்கிழமை காலை லட்சுமி தனது மகள் வீட்டுக்குச் சென்றாராம். பிற்பகலில் அவா் மீண்டும் வீட்டுக்கு வந்து பாா்த்தபோது, மோகன் வீட்டில் புடவையால் தூக்கிட்டுத் தற்கொலை செய்திருந்தது தெரியவந்தது.
இதுகுறித்து லட்சுமி அளித்த புகாரின்பேரில், செஞ்சி போலீஸாா் சடலத்தை கைப்பற்றி உடல்கூறாய்வுக்காக செஞ்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும் இதுகுறித்து வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.
