பொல்லாப் பிள்ளையார் ஆலய கும்பாபிஷேகம்
By | Published On : 07th September 2009 03:07 AM | Last Updated : 20th September 2012 05:21 PM | அ+அ அ- |

சிதம்பரம், செப். 6: கடலூர் மாவட்டம் காட்டுமன்னார்கோவில் அருகே உள்ள திருநாரையூர் கிராமத்தில் அமைந்துள்ள பொல்லாப் பிள்ளையார், திரிபுரசுந்தரி சமேத சுயம்பிரகாச ஈஸ்வரர் ஆலய மகா கும்பாபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை விமரிசையாக நடைபெற்றது.
இந்த ஆலயம் இந்து சமய அறநிலையத்துறை சார்பில், நிதி வசதியற்ற திருக்கோயில் திருப்பணி நிதியுதவி திட்டத்தின் கீழ் ரூ. 7.75 லட்சம் மற்றும் பக்தர்கள் நிதியுதவி சேர்த்து சுமார் 40 லட்சம் செலவில் திருப்பணி செய்யப்பட்டுள்ளது. விழாவில் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம், பாஜக தலைவர் இல.கணேசன், தருமை ஆதீனம் சண்முகதேசிக ஞானசம்பந்த பரமாச்சாரியார், கோட்டாட்சியர் ஜி.ராமலிங்கம், குமராட்சி ஒன்றியக்குழுத் தலைவர் ரா.மாமல்லன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.