உலக போதை ஒழிப்பு தினத்தை முன்னிட்டு, கடலூர், சிதம்பரம், விருத்தாசலத்தில் போதைப் பொருள்கள் ஒழிப்பு விழிப்புணர்வுப் பேரணி வியாழக்கிழமை நடைபெற்றது.
மாவட்ட கலால் துறை சார்பில் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தப் பேரணியில் பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
கடலூரில் உழவர் சந்தை அருகே தொடங்கிய பேரணியை மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் தொடங்கி வைத்தார். கடலூர் கோட்டாட்சியர் மோ.ஷர்மிளா, ஏடிஎஸ்பி திருமலைச்சாமி, துணை ஆட்சியர் (பயிற்சி) பன்னீர்செலவம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
சிதம்பரம்
சிதம்பரத்தில் வடக்குரத வீதி தலைமை தபால் நிலையம் அருகே பேரணியை உதவிஆட்சியர் எம்.அரவிந்த் தொடங்கி வைத்தார்.
மாணவ, மாணவிகள் போதைப் பொருளுக்கு எதிரான கோஷங்களை எழுப்பியவாறும், அதுகுறித்த பதாகைகளை ஏந்தியவாறும் சென்றர். பேரணி முக்கிய வீதிகள் வழியாகச் சென்று, மேலரத வீதியை அடைந்தது. கோட்ட கலால் அலுவலர் ஏ.அனந்தராமன், மதுவிலக்கு அமலாக்குப் பிரிவு ஆய்வாளர் தவமணி, கலால் ஆய்வாளர் எம்.சோமசுந்தரம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
விருத்தாசலம்
விருத்தாசலத்தில் விருத்தாம்பிகை கல்வியியல் கல்லூரி மாணவர்கள் பங்கேற்ற விழிப்புணர்வுப் பேரணி, நகரின் முக்கிய வீதிகள் வழியாகச் சென்றது.
கலால் வட்டாட்சியர் கிருஷ்ணமூர்த்தி பேரணியை தொடங்கிவைத்தார்.
கல்லூரி முதல்வர் செந்தில்குமார், கிராம நிர்வாக அலுவலர் ராஜேஷ்வரன், கலால் ஆய்வாளர் நாகரத்தினம், உதவி ஆய்வாளர்கள் மீனாள், பாண்டியன் உள்பட பலர் பங்கேற்றனர்.