சுடச்சுட

  

  உயர் மின் அழுத்தம்: வீட்டு மின்சாதனப் பொருள்கள் சேதம்

  By பண்ருட்டி  |   Published on : 01st December 2014 03:48 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  பண்ருட்டி அருகே ஞாயிற்றுக்கிழமை திடீரென ஏற்பட்ட உயர் மின் அழுத்தம் காரணமாக வீடுகளில் இருந்த மின் சாதனப் பொருள்கள் சேதமடைந்தன.

  பண்ருட்டி நகராட்சிக்கு உள்பட்ட திருவதிகையில் பெருமாள் கோயில் தெரு, மொட்டலிங்கம் தெரு, பாரதி தெரு, கோகுல தெரு, பழைய கடலூர் பிரதான சாலை ஆகிய பகுதியில் உள்ள குடியிருப்புகளுக்கு, திருவதிகை பாவாடை உயர்நிலைப் பள்ளி அருகே உள்ள மின் மாற்றி மூலம் மின்சாரம் விநியோகிக்கப்படுகிறது.

  ஞாயிற்றுக்கிழமை மதியம் வீடுகளுக்குச் செல்லும் மின் இணைப்பில் திடீரென உயர் மின் அழுத்த மின்சாரம் பாய்ந்ததால், அப்பகுதியில் இருந்த 100-க்கும் மேற்பட்ட வீடுகளில் இருந்த, தொலைக்காட்சிப் பெட்டிகள், குளிர்பதனப் பெட்டி, ஸ்டெப்லேசர், மிக்ஸி உள்ளிட்ட மின் சாதனப் பொருள்கள் வெடித்துச் சிதறி பழுதடைந்தன.

  ஞாயிற்றுக்கிழமை என்பதால் வீட்டில் டிவி பார்த்துக் கொண்டிருந்தோம். திடீரென டிவி வெடித்து சிதறியதால் அதிர்ச்சி அடைந்தோம். வீட்டில் இருந்த அனைத்து மின் சாதனப் பொருள்களும் சேதம் அடைந்து விட்டன.

  இங்குள்ள மின்மாற்றியை மின்சார வாரியம் முறையாக பராமரிக்கவில்லை எனவும், உயர் மின் அழுத்தம் காரணமாக மின் கம்பத்தில் உள்ள இன்ஸ்லேட்டர்கள் வெடித்து சிதறிக் கிடந்ததாக செல்வம் என்பவர் தெரிவித்தார்.

  இதனைத் தொடர்ந்து, மின்வாரியத்துக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில், சேதமடைந்த தொலைக்காட்சிப் பெட்டிகளை மின்மாற்றி அருகே அடுக்கி வைத்திருந்தனர்.

  இந்த விபத்தில் சேதமடைந்த பொருள்களின் மதிப்பு பல லட்சத்தை தாண்டும் என அங்கிருந்தவர்கள் தெரிவித்தனர்.

  இதுகுறித்து, பண்ருட்டி இளமின் பொறியாளர் சுமதியிடம் கேட்டபோது, திருவதிகை சரநாராயணப் பெருமாள் கோயில் கோபுர கட்டுமானப் பணிக்காக கிரேன் மூலம் கருங்கல் தூண் தூக்கும்போது, அருகில் இருந்த மின்கம்பத்தில் இருந்த பீங்கான் உடைந்ததால் அதிக மின் அழுத்தம் ஏற்பட்டு அப்பகுதியில் இருந்த வீடுகளில் மின்சாதனப் பொருள்கள் சேதமடைந்தன என்றார்.

  மேலும், கிரேன் ஆபரேட்டர் மீது காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது என்றும் தெரிவித்தார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai