சுடச்சுட

  

  கட்டாய கல்விச் சட்டத்தில் மாணவர்களை சேர்க்க மாட்டோம்

  By கடலூர்  |   Published on : 02nd December 2014 03:38 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  வரும் கல்வியாண்டில் கட்டாய கல்விச் சட்டத்தின் கீழ், தனியார் பள்ளிகளில் மாணவர்களை சேர்க்க மாட்டோம் என்று தமிழ்நாடு நர்சரி, பிரைமரி, மெட்ரிக்குலேஷன், மேல்நிலை மற்றும் சிபிஎஸ்இ பள்ளிகளின் சங்கம் தெரிவித்துள்ளது.

  இச் சங்கத்தின் மாநில பொதுச்செயலர் கே.ஆர்.நந்தகுமார் கடலூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் இதுகுறித்து கூறியது: தமிழகத்தில் 16,500 மெட்ரிக், சிபிஎஸ்இ, நர்சரி பள்ளிகள் செயல்படுகின்றன. சுமார் 1.50 கோடி மாணவர்களுடன், 1.50 லட்சம் ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர்.

  கடந்த 3 ஆண்டுகளில் அனைவருக்கும் இலவச கல்விச் சட்டத்தின் கீழ் 1.50 லட்சம் மாணவர்களை தனியார் பள்ளிகள் தங்களது பள்ளியில் சேர்த்துள்ளன.

  இதற்கான கல்விக் கட்டணம் ரூ.150 கோடியை மத்திய அரசு தமிழக அரசுக்கு அளித்துள்ள போதிலும் தமிழக அரசு தனியார் பள்ளிகளுக்கு தர மறுக்கிறது.

  இதனால், பள்ளிகளை நடத்த முடியாத சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே, வரும் கல்வியாண்டில் இச் சட்டத்தின் கீழ் மாணவர்களை சேர்க்க மாட்டோம்.

  பள்ளிகளின் தொடங்க அங்கீகாரம் மற்றும் தொடர் அங்கீகாரத்துக்காக விண்ணப்பிக்கும் போது பல்வேறு தரப்பினருக்கும் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது. எனினும், தற்போது 6 ஆயிரம் பள்ளிகள் அங்கீகாரம் இல்லாமல் செயல்படுகின்றன.

  3 ஆண்டுகளுக்கு அங்கீகாரம் கேட்டால் ஒரு ஆண்டுக்கு மட்டுமே அளிக்கப்படுகிறது. கல்விக் கட்டணமும் முறையாக அறிவிக்கப்படவில்லை. இதனால், தமிழகத்தில் நூற்றுக்கணக்கான பள்ளிகள் விற்பனை செய்யப்படும் நிலையில் உள்ளன.

  நர்சரி, பிரைமரி பள்ளிகளை தொடக்கப் பள்ளிகளாக மாற்ற அனுமதிக்க வேண்டும்.

  இந்தியா முழுவதும் ஒரே பாடத்திட்டம் அறிமுகப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது.

  இதனை உளப்பூர்வமாக நாங்கள் வரவேற்கிறோம். எனவே, எங்கள் பிரச்னையில் தமிழக அரசு தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

  இதைத்தொடர்ந்து சங்கத்தின் மாவட்டச் செயலர் வி.ஜி.அய்யனார், மாநில துணைப் பொதுச்செயலர் பி.ஆறுமுகம் உள்ளிட்ட நிர்வாகிகள், மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமாரைச் சந்தித்து இக் கோரிக்கைகள் தொடர்பான மனுவை அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai