சுடச்சுட

  

  சட்டப்பேரவையில் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம்

  By கடலூர்,  |   Published on : 02nd December 2014 03:33 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  சட்டப்பேரவைக் கூட்டத்தொடர் ஜனநாயக முறையில் நடந்தால் மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம் என்றார் திமுக பொருளர் மு.க.ஸ்டாலின்.

  அதிமுக அரசின் செயல்பாடுகள், விலைவாசி உயர்வைக் கண்டித்து, கடலூர் மாவட்ட திமுக சார்பில் கடலூர், மஞ்சக்குப்பத்தில் பொதுக்கூட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது. மாவட்டச் செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தலைமை வகித்தார்.

  கூட்டத்தில் மு.க.ஸ்டாலின் பேசியது: அதிமுக அரசைக் கண்டித்து தமிழகத்தில் 5 ஆயிரம் பொதுக் கூட்டங்கள், தெருமுனைப் பிரசாரக் கூட்டங்கள் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. அதன்படி, முதல் கூட்டம் கடலூரில் நடைபெறுகிறது.

  சட்டப்பேரவைக் கூட்டப்படுவது மகிழ்ச்சி அளிக்கிறது. இக்கூட்டத் தொடர், ஜனநாயக அடிப்படையில் முறையாக நடைபெறும்பட்சத்தில், மக்கள் பிரச்னை குறித்து பேசுவோம்.

  பால், பேருந்து, மின்சாரக் கட்டணங்கள் உயர்ந்து விட்டன. தமிழகத்துக்கு வரவேண்டிய தொழில் நிறுவனங்கள் அண்டை மாநிலங்களுக்குச் செல்கின்றன. தொழில் வளர்ச்சியில் தமிழகம் கடைசி இடத்துக்குச் சென்று விட்டது.

  7,798 மெகாவாட் மின்சாரம் தயாரிப்பதற்காக திமுக ஆட்சியில் கொண்டு வரப்பட்டு, 80 முதல் 90 சதவீதம் வரை பணிகள் முடிந்தும், அத்திட்டங்களை அதிமுக அரசு தொடரவில்லை. இதனால், மின்வெட்டு தமிழகத்தில் நீடிக்கிறது.

  கடலூர் மாவட்டத்தில் கடந்த 22.7.2014 அன்று அண்ணாமலை நகர் காவல் உதவி ஆய்வாளர் கணேசன் வெட்டிக் கொலை செய்யப்பட்டது முதல் சிதம்பரம் பாஜக பிரமுகர் வெங்கடேசன் வரையில் ஏராளமான சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன.

  மேலும், விருதுநகர், சென்னை, திண்டுக்கல் பகுதிகளில் பள்ளி உள்ளிட்ட கல்வி நிலையங்களில் கொலை, ஆசிரியர்கள் மீதான தாக்குதல் அதிகரித்துள்ளது. சட்டம், ஒழுங்கை நிலைநாட்ட தேவையான நடவடிக்கைகளை முதல்வர் மேற்கொள்ள வேண்டும் என்றார்.

  கூட்டத்தில், திமுக மாவட்ட அவைத் தலைவர் து.தங்கராசு, மாநில மாணவரணிச் செயலர் இள.புகழேந்தி, முன்னாள் எம்.பி., கணேசன், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சபா.ராஜேந்திரன், குழந்தை தமிழரசன், துரை.கி.சரவணன், நந்தகோபாலகிருஷ்ணன், நகரச் செயலர் எஸ்.ராஜா, குறிஞ்சிப்பாடி பாலமுருகன், இளைஞரணி அமைப்பாளர் கார்த்திக், துணை அமைப்பாளர் ஆர்.சுந்தர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai