சுடச்சுட

  

  மத்திய அரசின் சாலைப் பாதுகாப்பு மசோதாவை எதிர்ப்போம் என்று அகில இந்திய மாநில அரசுப் பணியாளர்கள் மகா சம்மேளனம் அறிவித்துள்ளது.

  இதுகுறித்து, அந்தச் சம்மேளனத்தின் அகில இந்திய பொதுச்செயலர் கு.பாலசுப்பிரமணியன் கடலூரில் திங்கள்கிழமை செய்தியாளர்களிடம் கூறியது:

  மத்திய தொழிலாளர் சங்கங்கள் கடந்த மாதம் தில்லியில் கூடி விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்துதல், வேலைவாய்ப்பை அதிகரிக்கச் செய்தல், குறைந்தபட்சம் ஊதியமாக ரூ.15 ஆயிரமும், ஓய்வூதியமாக ரூ.3,500-ம் நிர்ணயிக்க வலியுறுத்துவது, அரசு, பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவது உள்ளிட்ட பிரச்னைகள் குறித்து விவாதித்தன.

  அதன் அடிப்படையில் 10 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 5-ம் தேதி அனைத்து மாவட்டத் தலைநகரங்களில் நாடு தழுவிய ஆர்ப்பாட்டம் நடத்தப்படும். இதில், தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்கம் பங்கேற்கிறது.

  மத்திய அரசு அண்மையில் சாலைப் பாதுகாப்பு மசோதா 2014ஐ தாக்கல் செய்துள்ளது. இதன்படி, நாட்டிலுள்ள அனைத்து போக்குவரத்துத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்க முடிவு செய்துள்ளது. இதனால், இத்துறையில் பணியாற்றும் சுமார் 1 லட்சம் அரசு ஊழியர்கள் அந்தத் தகுதியை இழப்பார்கள். நாடு முழுவதும் ஓட்டுநர்கள் தங்களது ஓட்டுநர் உரிமத்தை புதுப்பிக்கும் போது மீண்டும் சோதனைக்கு உள்படுத்தப்படுவார்கள். வாகனப் பதிவு, தகுதிச் சான்று, ஓட்டுநர் உரிமம் உள்ளிட்ட அனைத்தும் தனியார் வசமாக்கப்படும். இது அரசு நிறுவனங்களை தனியாருக்கு தாரை வார்க்கும் செயலாகும். இதனை வன்மையாக கண்டிக்கிறோம்.

  முந்தைய மத்திய அரசு பின்பற்றி வந்த அந்நிய முதலீடு, தனியார்மயம், கம்பெனிகளே விலையை நிர்ணயித்துக் கொள்ளுதல் ஆகியவற்றை எதிர்த்த பாஜக தற்போது அதே கொள்கையைத் தான் கடைபிடிக்கிறது. மத்திய அரசு பொருள்களுக்கான மானியத்தை பணமாக செலுத்தாமல் மக்களுக்கு பொருளாகவே வழங்க வேண்டும். இதற்காக அமைக்கப்பட்ட சாந்தகுமார் குழு அறிக்கையை நிராகரிக்க வேண்டும் என்றார்.

  நிகழ்வின்போது, தமிழ்நாடு அரசுப் பணியாளர் சங்க மாவட்டச் செயலர் மு.ராஜாமணி, முன்னாள் மாவட்ட அமைப்புச் செயலர் சீனு.சம்பத், நியாயவிலைக் கடை பணியாளர்கள் சங்க நிர்வாகி ஜெயச்சந்திரராஜா

  ஆகியோர் உடனிருந்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai