சுடச்சுட

  

  கரும்புக்கான விலை நிர்ணயம்:  விரைந்து நடவடிக்கை எடுக்குமா மாவட்ட நிர்வாகம்?

  By  கடலூர்,  |   Published on : 03rd December 2014 01:12 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கரும்புக்கான விலை நிர்ணயத்தில் அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமென விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.
   கடலூர் மாவட்டத்தின் பிரதான தொழில் விவசாயம். இம்மாவட்டத்தில் பெரும்பாலான விவசாயிகள் கரும்பு சாகுபடி செய்கின்றனர். இந்த கரும்பு தனியார் சர்க்கரை ஆலைகளுக்கு வெட்டி அனுப்பப்படுகின்றன. கரும்புக்கு உரிய விலையை மத்திய, மாநில அரசுகள் நிர்ணயம் செய்கின்றன. இவ்வாறு நிர்ணயம் செய்யப்படும் விலை தங்களுக்கு கட்டுப்படியாகவில்லை எனக் கூறி அந்த விலையை சர்க்கரை ஆலைகள் ஏற்க மறுப்பதால் விவசாயிகளுக்கும், ஆலை நிர்வாகத்துக்குமிடையே பல்வேறு பிரச்னைகள் ஏற்பட்டு வருகின்றன.
   குறிப்பாக கரும்பு கொள்முதல் விலையாக டன் ஒன்றுக்கு ரூ.2,550 என அரசு நிர்ணயம் செய்தது. ஆனால், நெல்லிக்குப்பத்தில் செயல்பட்டு வரும் இஐடி பாரி சர்க்கரை ஆலை இந்த தொகையை விவசாயிகளுக்கு அளிக்கவில்லை. இதனால், சுமார் 20 ஆயிரம் விவசாயிகளுக்கு ரூ.58 கோடி பாக்கித் தொகையை ஆலை செலுத்த வேண்டியுள்ளது.
   இதுதொடர்பாக விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள் மாவட்ட ஆட்சியர் உள்ளிட்ட அனைத்துத் துறை அலுவலர்கள், மக்கள் பிரதிநிதிகளை சந்தித்து மனுக்கொடுத்தும் இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
   இந்நிலையில் ஆலை நிர்வாகம் நடப்பாண்டுக்கான அரவையை அண்மையில் துவங்கியுள்ளது. ஆனால், விவசாயிகள் தங்களுக்கான நிலுவைத் தொகை மற்றும் நடப்பாண்டுக்கான வெட்டுத் தொகை அறிவிக்கப்பட்டால் மட்டுமே கரும்பை வெட்ட அனுமதிப்போம் என்று கூறி வருகின்றனர். இதனால், அரவைப்பணி பாதித்துள்ளது.
   இதுகுறித்து இஐடி பாரி நெல்லிக்குப்பம் கரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் ஏ.கே.பூவராகமூர்த்தி கூறியதாவது: 2014-15ம் ஆண்டுக்கு கரும்பு கொள்முதல் விலை டன்னுக்கு ரூ.2,415 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ஆனால், ஆலை நிர்வாகம் ரூ.2,300 மட்டுமே தருவதாக கூறுகிறது.
   இதுகுறித்து ஆட்சியர், அமைச்சர்களிடம் புகார் தெரிவித்துள்ளோம். மேலும், எங்களுக்கான பாக்கித் தொகை ரூ.58 கோடியை தர வேண்டும். அவ்வாறு இல்லாதபட்சத்தில் ஆலையை மூட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
   புதுவை மாநிலம் அரியூரில் உள்ள கரும்பு ஆலை விவசாயிகளுக்கு நிலுவைத் தொகை தராததைத் தொடர்ந்து அந்த ஆலையை மூட விழுப்புரம் மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. அதனை கடலூர் மாவட்டத்திலும் கடைபிடிக்க வேண்டும் என்றார்.
   சட்டம்-ஒழுங்கை பாதிக்கும் வகையில் இப்பிரச்னை உருவாகி வருவதால் மாவட்ட நிர்வாகம் விரைந்து செயல்பட்டு விவசாயிகளுக்கான தொகையை பெற்றுத்தர வேண்டும் என்பதே விவசாயிகளின் எதிர்பார்ப்பாகும்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai