சுடச்சுட

  

  கிராம மக்களின் தொடர் போராட்டம்:  மணல் குவாரி தாற்காலிக மூடல்

  By  விருத்தாசலம்,  |   Published on : 03rd December 2014 12:44 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விருத்தாசலத்தை அடுத்த கார்மாங்குடி வெள்ளாற்றுப் பகுதியில் செயல்பட்ட மணல் குவாரி கிராம மக்களின் தொடர் போராட்டத்தால், தாற்காலிகமாக நிறுத்தி வைக்க கோட்டாட்சியர் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டார்.
   விருத்தாசலம் அடுத்த கார்மாங்குடி, வல்லியம், சக்கரமங்கலம், முத்துகிருஷ்ணாபுரம் உள்ளிட்ட 15 கிராமங்களின் வழியாக வெள்ளாறு செல்கிறது. இதில், கார்மாங்குடி பகுதியில் மணல் குவாரி உள்ளது. இங்கு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக மணல் எடுப்பதால் நிலத்தடி நீர்மட்டம் குறைந்து விவசாயம் பாதிக்கப்படும் அபாயம் உள்ளதால், மணல் குவாரியை மூட வேண்டும் என கிராம மக்கள் போராட்டம் நடத்தினர்.
   மேலும், வல்லியம் கிராம மக்கள் சார்பில் செவ்வாய்க்கிழமை முற்றுகைப்போராட்டம் நடைபெறும் என அறிவித்தனர். இதுதொடர்பாக, திங்கள்கிழமை வட்டாட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற சமாதானக் கூட்டம் தோல்வியில் முடிவடைந்தது. அப்போது, 15 கிராம மக்கள் சார்பில் திட்டமிட்டபடி மணல் குவாரியை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபடுவோம் என போராட்டக்குழு அறிவித்தது.
   இந்நிலையில், மனித உரிமை பாதுகாப்பு மையத்தினர் தலைமையில், செவ்வாய்க்கிழமை 15 கிராம மக்கள் குவாரிப் பகுதியில் கூடத் துவங்கினர். இதனை அடுத்து, மணல் அள்ளிக்கொண்டிருந்த 10 க்கும் மேல்பட்ட வாகனங்களை போலீஸார் அங்கிருந்து வெளியேற்றினர். அப்போது 500 க்கும் மேற்பட்ட பொதுமக்கள் லாரிகளை மறிக்க ஓடிவந்தனர். ஆனால் பொதுமக்கள் அங்கு வருவதற்குள் லாரிகள் சென்றுவிட்டன. இதையடுத்து மணல் அள்ளும் 2 பொக்லைன் இயந்திரங்களை அகற்றவிடாமல் அவர்கள் மறித்துவிட்டனர்.
   இதுகுறித்து தகவலறிந்த விருத்தாசலம் கோட்டாட்சியர் ப.மு. செந்தில்குமார் அங்குவந்து, போராட்டக்காரர்களிடம் பேச்சு நடத்தினார். அப்போது, 1 வாரம் அவகாசம் வழங்கினால் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் எனத் தெரிவித்தார்.
   இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து பொதுமக்கள் குரல் எழுப்பினர். இதனைத் தொடர்ந்து, அவர்களுடன் பேச்சு நடத்திய கோட்டாட்சியர் பொதுப்பணித்துறை, வருவாய்த் துறை உள்ளிட்ட துறைகளைச் சேர்ந்த அதிகாரிகளின் குழு அமைக்கப்பட்டு மணல் குவாரி தொடர்பாக ஆய்வு செய்யப்படும். தற்போது தாற்காலிகமாக மணல் குவாரி மூடப்படும் என அறிவித்தார்.
   அதனையடுத்து, மணல் அள்ள ஆற்றில் நிறுத்தப்பட்டிருந்த
   2 பொக்லைன் வாகனங்களை விடுவித்து பொதுமக்கள் கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai