சுடச்சுட

  

  தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்கக் கோரிக்கை

  By  கடலூர்,  |   Published on : 03rd December 2014 01:04 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  விவசாயிகளுக்கு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை அரசுடைமையாக்க வேண்டுமென தமிழக வாழ்வுரிமை கட்சி வேண்டுகோள் விடுத்துள்ளது.
   இதுகுறித்து கட்சித் தலைவர் தி. வேல்முருகன் செவ்வாய்க்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழகத்தில் 27 தனியார் சர்க்கரை ஆலைகள் கரும்பு விவசாயிகளுக்கு ரூ. 500 கோடியை வழங்காமல் இருப்பது கண்டனத்துக்குரியது. கரும்பில் இருந்து மொலாசஸ், எரிசாராயம், மின்சாரம், இயற்கை உரம் தயாரிக்கப்படுகிறது. இதில் ஒரு டன் கரும்பில் சர்க்கரை ஆலைக்கு ரூ.8 ஆயிரம் கிடைக்க வாய்ப்புள்ளது.
   ஆனால் கரும்பு விவசாயிகளுக்கு தமிழக அரசு தர வேண்டும் என்று நிர்ணயித்த மிகக் குறைந்தபட்ச தொகையான ரூ.2,550 என்பதை கொடுக்க மறுக்கிறார்கள்.
   இதில் ரூ. 300ஐக் குறைத்து கரும்பு டன்னுக்கு ரூ 2,350 என்ற அளவில்தான் வழங்குகின்றன. இந்த வகையில் விவசாயிகளுக்கு தனியார் சர்க்கரை ஆலைகள் செலுத்த வேண்டிய நிலுவைத் தொகை மட்டும் ரூ.500 கோடி.
   இந்தியாவிலேயே தமிழகத்தில் மட்டும்தான் கரும்புக்கான கொள்முதல் விலை மிகக் குறைவாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. உத்தரப்பிரதேச மாநிலத்தில் டன் ரூ.3,200, பஞ்சாபில் ரூ.3,020, அரியாணாவில் ரூ.3,100 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
   தற்போதும் கூட 2014-15 அரவை பருவத்துக்கு முத்தரப்பு கூட்டத்தைக் கூட்டவில்லை. விவசாயிகளுக்கு தர வேண்டிய ரூ. 500 கோடி அளவு பாக்கி வைத்துள்ள தனியார் சர்க்கரை ஆலைகளை உடனே அரசுடமையாக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.
   
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai