சுடச்சுட

  

  வங்கி ஊழியர்கள் வேலை நிறுத்தம்: ரூ.350 கோடி வர்த்தகம் பாதிப்பு

  By  கடலூர்,  |   Published on : 03rd December 2014 01:03 PM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் வங்கி ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டதால் ரூ. 350 கோடிக்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டதாக ஊழியர் சங்கம் தெரிவித்துள்ளது.
   ஊதிய உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நாடுமுழுவதும் வங்கி ஊழியர்கள் கடந்த மாதம் 12-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனைத் தொடர்ந்து கடந்த திங்கள்கிழமை நடைபெற்ற ஊழியர் சங்கங்கள் மற்றும் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்தது.
   எனவே, அகில இந்திய வங்கி ஊழியர் சங்கம், தேசிய வங்கி ஊழியர் சம்மேளனம், வங்கி அதிகாரிகள் சங்கம், அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கம் உள்ளிட்ட 9 சங்கங்கள் ஒன்றிணைந்து டிச. 2-ம் தேதி வேலைநிறுத்தப் போராட்டம் நடைபெறும் என அறிவிப்பு வெளியிட்டன. அதன்படி, செவ்வாய்க்கிழமை கடலூர் மாவட்டத்தில் 180 பொதுத்துறை மற்றும் தனியார் வங்கிகளின் ஊழியர்கள், அதிகாரிகள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
   இதனால், வங்கிகளில் பண பரிவர்த்தனை முற்றிலுமாக பாதிக்கப்பட்டது. சில வங்கிகள் திறந்திருந்த போதிலும் எந்த வர்த்தகமும் நடைபெறவில்லை. இந்த போராட்டத்தில் கடலூர் மாவட்டத்தில் 1,350 ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் பங்கேற்றனர் என்றும் இதனால், சுமார் ரூ.300 முதல் ரூ.350 கோடி வரையில் பணப் பரிவர்த்தனை பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத்தின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பி.கே.வி.ரமணி கூறினார்.
   மேலும், ஏடிஎம்களில் பணம் நிரப்பப்பட்டிருந்தாலும், பிற்பகலுக்குள் பணம் காலியாகியதால் பெரும்பாலான ஏடிஎம் சேவையும் முடங்கின.
   முன்னதாக ஊழியர் சங்கங்கள் மற்றும் இந்திய வங்கிகள் நிர்வாக அமைப்பின் உயர் அதிகாரிகளுடனான பேச்சுவார்த்தை தோல்வியில் முடிவடைந்ததைத் தொடர்ந்து திங்கள்கிழமை மாலையில் கடலூரில் இந்திய வங்கி ஊழியர் சங்கத்தினர் தாலுகா செயலர் மீரா தலைமையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
   இதில், பொதுச்செயலர் ஸ்ரீதர் பங்கேற்றார்.
   

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai