சுடச்சுட

    

    கடலூரில் லஞ்ச ஒழிப்பு போலீஸார் மீண்டும் விசாரணை

    By கடலூர்,  |   Published on : 04th December 2014 03:28 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

    கடலூர் நகராட்சிப் பகுதியில் கட்டப்பட்ட கட்டடங்களுக்கு வரிவிதிப்பதில் முறைகேடுகள் நிகழ்ந்ததாக எழுந்த புகார் தொடர்பாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸார் புதன்கிழமை மீண்டும் விசாரணை நடத்தினர்.

    கடலூர் நகரில் புதிதாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் வணிக கட்டடங்கள் வரி விதிப்பை குறைப்பதற்காக மொத்த பரப்பளவை குறைத்து பதிவேட்டில் பதியப்பட்டுள்ளதாக புகார்கள் எழுந்தன.

    இதில், அதிகாரிகள் உள்ளிட்டோர் லஞ்சம் பெற்றுக்கொண்டு முறைகேட்டில் ஈடுபட்டதாக லஞ்ச ஒழிப்புப் போலீஸாருக்கு பல்வேறு தரப்பினர் புகார் தெரிவித்தனர்.

    இதுகுறித்து, கடலூர் மாவட்ட லஞ்ச ஒழிப்புத் துறை ஆய்வாளர் சதீஷ் தலைமையில் கடந்த ஆகஸ்ட் 23-ம் தேதி வழக்குப் பதிவு செய்யப்பட்டு கடலூர் நகராட்சிக்கு உள்பட்ட சாவடிப் பகுதியில் குறைத்து வரிவிதிக்கப்பட்ட வீடுகளை அளவீடு செய்தனர். அதில் பல்வேறு முறைகேடுகள் கண்டு பிடிக்கப்பட்டன.

    பின்னர், கடலூர் நகராட்சித் தலைவராக இருந்த அதிமுகவின் சி.கே.சுப்பிரமணியன் அரசியல் காரணங்களுக்காக தனது பதவியை ராஜிநாமா செய்தார். இடைத்தேர்தலில் அதிமுக நகரச் செயலர் ஆர்.குமரன் நகர்மன்றத் தலைவராக தேர்வு செய்யப்பட்டார்.

    இதன் காரணமாக லஞ்ச ஒழிப்புத் துறை போலீஸாரின் விசாரணை தாற்காலிகமாக நிறுத்தப்பட்டது.

    இந்நிலையில், லஞ்ச ஒழிப்புப் போலீஸார் புதன்கிழமை மீண்டும் விசாரணையைத் தொடங்கினர்.

    ஆய்வாளர் சதீஷ் தலைமையில் நகராட்சி ஊழியர்களை கொண்டு திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு தெருவில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

    குறிப்பிட்ட காலத்தில் கட்டப்பட்ட வீடுகளுக்குச் சென்று

    நகராட்சி பதிவேட்டில் உள்ள அளவையும், வீட்டின் அளவையும் அளந்து ஒப்பிட்டு ஆய்வு செய்தனர்.

    புதன்கிழமை நடைபெற்ற ஆய்வின் போது திருப்பாதிரிப்புலியூர் சங்கரநாயுடு வீதியில் உள்ள ஒரு வீட்டுக்கு 800 சதுர அடி அளவுக்கு வரி விதிக்கப்பட்டுள்ளது. அந்த வீட்டை லஞ்சஒழிப்புப் போலீஸார் அளந்த போது அந்த வீட்டின் அளவு 4000 சதுர அடியாக இருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

    இதில் தவறு கண்டுபிடிக்கப்பட்டால் வரிவிதித்த நகராட்சி ஆணையர், வருவாய் ஆய்வாளர், உதவி ஆய்வாளர் ஆகியோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

    500 வீடுகளுக்கு மேல் ஆய்வு செய்ய வேண்டியுள்ளதால் 2 குழுவினர் இப்பணியில் ஈடுபட்டுள்ளதாகவும், இப்பணி மேலும் சில நாள்களுக்கு தொடரும் என்றும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

    • அதிகம்
      படிக்கப்பட்டவை
    • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
    google_play app_store
    kattana sevai