சுடச்சுட

  

  பரங்கிப்பேட்டையில் பள்ளி வளாகத்தில் தேங்கிய மழைநீரை அகற்ற வலியுறுத்தி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினர் புதன்கிழமை மீன்பிடிக்கும் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  பரங்கிப்பேட்டை சலங்ககார தெருவில் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளி உள்ளது. இங்கு 193 குழந்தைகள் கல்வி பயின்று வருகின்றனர்

  இதனிடையே, கடந்த சில நாள்களாக மாவட்டம் முழுவதும் பரவலாக கனமழை பெய்தது. இதில், பள்ளியின் அருகில் பெய்த மழை நீர் வடிய வழியில்லாமல் பள்ளி வளாகத்தில் குட்டையாக தேங்கியது. இந்த மழைநீரில் டெங்கு கொசு உள்ளிட்ட பல்வேறு நோய் பரப்பும் கிருமிகள் உருவாகின.

  இதனால் மாணவர்கள் இயற்கை உபாதை கழிக்கும் இடத்துக்குச் செல்வதில் சிரமம் ஏற்பட்டது.

  தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நகரச் செயலர் வேல்முருகன் இதுகுறித்து சம்பந்தப்பட்ட கல்வித் துறை அதிகாரிகளுக்கு புகார் தெரிவித்தும் எந்த நடவடிக்கையும் இல்லை.

  இதனைத் தொடர்ந்து பள்ளியில் தேங்கிநிற்கும் மழை நீரில் மீன் பிடிக்கும் போராட்டம் நடத்தப்படுமென அறிவிக்கப்பட்டது.

  அதன்படி, புதன்கிழமை நகரச் செயலர் வேல்முருகன் தலைமையில் மீன்பிடிக்கும் போராட்டத்துக்காக கட்சியினர் பள்ளி வளாகத்தில் குவிந்தனர். ஒன்றியச் செயலர் ரமேஷ்பாபு போராட்டத்தை தொடங்கிவைத்தார். ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஜெயசீலன், லெனின் ஜீவா, கருணைச்செல்வம், அன்பரசு உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

  தகவல் அறிந்த பரங்கிப்பேட்டை ஒன்றிய தொடக்கக் கல்வி அலுவலர் ராஜசேகர், துணை வட்டார வளர்ச்சி அலுவலர் (சத்துணவு) பசுபதி ஆகியோர் சம்பவ இடத்துக்குச் சென்று பேச்சுவார்த்தை நடத்தினர். இதில், அனைத்து பிரச்னையும் விரைவில் சரிசெய்யப்படுமென உறுதியளித்தனர். முதற்கட்டமாக பள்ளி வளாகத்தில் தேங்கியுள்ள மழை நீரை வெளியேற்ற மண் அடிக்கவும், பழுதான நிலையில் உள்ள சத்துணவுக் கூடத்தை வேறு இடத்துக்கு மாற்ற ஏற்பாடு செய்தனர்.

  இதனையடுத்து போராட்டத்தை கைவிட்டு கட்சியினர் கலைந்து சென்றனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai