சுடச்சுட

  

  எய்ட்ஸை ஒழிக்க விழிப்புணர்வுத்தேவை என்றார் கடலூர் மாவட்ட ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார்.

  கடலூர் மாவட்ட எய்ட்ஸ் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு அலகு சார்பில் உலக எய்ட்ஸ் தின விழிப்புணர்வு பேரணி மற்றும் கருத்தரங்கு கடலூரில் வியாழக்கிழமை நடைபெற்றது. மாவட்ட ஆட்சியரின் இல்லத்திலிருந்து துவங்கிய பேரணியை ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் கொடியசைத்து துவக்கி வைத்தார்.

  முன்னதாக, ஆட்சியரைத் தொடர்ந்து அனைவரும் விழிப்புணர்வு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர். புனித மரியன்னை, சி.கே., புனித அந்தோணி, பிலோமினா, கிருஷ்ணசாமி பள்ளிகளைச்சேர்ந்த மாணவ, மாணவிகள் பேரணியில் பங்கேற்றனர்.

  இதனைத் தொடர்ந்து மாணவ,மாணவிகள் பங்கேற்ற கருத்தரங்கு புனித வளனார் மேல்நிலைப்பள்ளியில் நடைபெற்றது. கருத்தரங்கில் ஆட்சியர் எஸ்.சுரேஷ்குமார் பேசியது: டிசம்பர் 1-ம் தேதி உலக எய்ட்ஸ் தினமாக கடைபிடிக்கப்படுகிறது. உலகில் மனித குலத்திற்கு சவலாக உள்ள எய்ட்ஸை ஒழிக்க நாம் அனைவரும் ஒன்றிணைந்து பாடுபட வேண்டும்.

  புதிய தொற்று இல்லாத, எய்ட்ஸால் இறப்பு இல்லாத, எய்ட்ஸ் பாதித்தோரை புறக்கணிக்காத தமிழகம் என்ற மையக்கருத்தை இவ்வாண்டு ஏற்று செயல்படுவோம் என்றார்.

  மேலும், கடலூர் மாவட்டத்தில் 2006ம் ஆண்டு முதல் தற்போது வரையில் 6,29,659 பேருக்கு பரிசோதனை நடத்தப்பட்டதில் 5,166 பேருக்கு எய்ட்ஸ் இருப்பது உறுதி செய்யப்பட்டது. கருவுற்றவர்களில் 2,52,427 பேருக்கான பரிசோதனையில் 4,018 பேருக்கு எய்ட்ஸ் உறுதி செய்யப்பட்டது. இதில், 4,018 பேருக்கு கூட்டு மருந்து சிகிச்சையளிக்கப்பட்டு வருகிறது.

  பள்ளி, கல்லூரி மாணவ, மாணவிகள் இந்நோய் குறித்து தெரிந்துக் கொண்டு அதுகுறித்த விழிப்புணர்வை மற்றவர்களுக்கு ஏற்படுத்த வேண்டும். சமுதாயத்தில் புறக்கணிப்பு நிலையை தவிர்க்க விழிப்புணர்வு தேவை. அதனை மாணவ சமுதாயத்தால் உருவாக்க முடியும் என்றார்.

  தொடர்ந்து பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு, நலத்திட்ட உதவிகளை ஆட்சியர் வழங்கினார்.

  இந்நிகழ்வுகளில் மாவட்ட வருவாய் அலுவலர் எம்.சுப்ரமணியன், மருத்துவப்பணிகள் இணை இயக்குநர் எஸ்.வித்யாசங்கர், பள்ளி தாளாளர் ஜி.பீட்டர்ராஜேந்திரன், மாவட்ட எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு திட்ட மேலாளர் சா.முகமதுபாரூக், செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ஆ.கதிரவன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

  சுகாதார பணிகள் துணை இயக்குநர் கே.ஆர்.ஜவகர்லால் வரவேற்றார்,  எய்ட்ஸ் கட்டுப்பாட்டு அலகு மாவட்ட மேற்பார்வையாளர் ஆர்.தங்கமணி நன்றி கூறினார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai