சுடச்சுட

  

  கர்நாடக அரசைக் கண்டித்து சிதம்பரத்தில் ரயில் மறியல்: 140 பேர் கைது

  By கடலூர்,  |   Published on : 05th December 2014 08:24 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  காவிரியில் கர்நாடக அரசு புதிய அணை கட்ட எதிர்ப்புத்தெரிவித்து சிதம்பரத்தில் ரயில் மறியலில் ஈடுபட்ட பல்வேறு அமைப்பினர் 140 பேர் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டனர்.

  கர்நாடக அரசு காவிரி ஆற்றின் குறுக்கே மேகதாது என்ற இடத்தில் புதிய அணை கட்டும் முயற்சியில் ஈடுபட்டு வருகிறது. இதனை மத்திய அரசு தடுக்க வேண்டும். பிரச்னைகளுக்கு நிரந்தர தீர்வு காணும் வகையில் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க வேண்டும். காவிரி ஒழுங்காற்றுக்குழு அமைக்க மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை விவசாய அமைப்புகள் வலியுறுத்தி வருகின்றன.

  இக்கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த மாதம் 22-ம் தேதி கடையடைப்பு, மறியல் உள்ளிட்ட போராட்டங்கள் நடத்தப்பட்டது.

  மீண்டும் இக்கோரிக்கையை வலியுறுத்தி தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சிதம்பரம், காட்டுமன்னார் கோயில் பகுதியில் கடையடைப்பு உள்ளிட்ட போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்திருந்தது. இந்த போராட்டத்திற்கு திமுக, தேமுதிக, காங்கிரஸ், பாஜக, பாமக, மதிமுக, விடுதலைச்சிறுத்தைகள், தவாக, நாம் தமிழர் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் ஆதரவு தெரிவித்தன.

  இதன்படி, தமிழ்நாடு விவசாயிகள் சங்க கடலூர் மாவட்டத்தலைவர் கோ.மாதவன் தலைமையில் பல்வேறு கட்சியினர் வியாழக்கிழமை சிதம்பரம் ரயில் நிலையத்தில் திருச்சியிலிருந்து சென்னைக்குச் செல்லும் சோழன் எக்ஸ்பிரஸ் ரயிலை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

  இதையடுத்து, போராட்டத்தில் ஈடுபட்ட கோ.மாதவன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் நகர செயலர் ஆர்.ராமச்சந்திரன், இந்திய கம்யூனிஸ்ட் கட்சி நகர செயலர் சேகர், விடுதலைச்சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலர் செல்லப்பன், மார்க்சிஸ்ட் ஒன்றிய செயலர்கள் ஆர்.சதானந்தம், எஸ்.ஜி.ரமேஷ்பாபு மற்றும் லோக்ஜனசக்தி கட்சியைச் சேர்ந்த 140 பேர் கைது செய்யப்பட்டனர்.

  விவசாயிகளின் போராட்டத்திற்கு சிதம்பரத்தில் அனைத்து வணிக நிறுவனங்களும் தங்களது கடைகளை அடைத்து ஆதரவு தெரிவித்தன.

  இதேப்போல் காட்டுமன்னார் கோயிலில் போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து அனைத்துக்கட்சி ஊர்வலம் நடைபெற்றது. இதில், திமுக, காங்கிரஸ், பாமக, மதிமுக, கம்யூனிஸ்ட் கட்சிகள் பங்கேற்றன. திமுக மாவட்ட செயலர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று பேசினார். இப்பகுதியிலும் வணிகர்கள் கடைகளை அடைத்து போராட்டத்திற்கு ஆதரவு அளித்தனர்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai