சுடச்சுட

  

  "கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லை'

  By கடலூர்,  |   Published on : 06th December 2014 04:02 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  கடலூர் மாவட்டத்தில் பறவைக் காய்ச்சல் பாதிப்பு இல்லையென கால்நடை பராமரிப்புத் துறையினர் தெரிவித்துள்ளனர்.

  கடலூர் துறைமுகம் அருகேயுள்ள பச்சாங்குப்பம் ஊராட்சி மகாலட்சுமி நகர் பகுதியில் வெள்ளிக்கிழமை சில கோழிகள் இறந்த நிலையில் கிடந்தன. தற்போது பரவி வரும் பறவைக் காய்ச்சலால் இறந்த கோழிகளை சிலர் இங்கே வீசிவிட்டு சென்றிருக்கலாம் என்று கருதி அப்பகுதியினர் இதுகுறித்து கால்நடை பராமரிப்புத் துறையினருக்கு தகவல் அளித்தனர்.

  இதையடுத்து, கால்நடை பராமரிப்புத் துறை துணை இயக்குநர் ஆர்.சுகுமார், உதவி இயக்குநர் ஜி.எஸ்.கணேசன், மருத்துவர்கள் வி.எஸ்.ராகவன், சுந்தரம், ஆய்வாளர் மோகனபிரியா ஆகியோர் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

  பின்னர், இதுகுறித்து துணை இயக்குநர் ஆர்.சுகுமார் கூறுகையில், கடலூர் மாவட்டத்தில் 217 கோழிப்பண்ணைகள் உள்ளன. இங்கு பண்ணைக்கு சுமார் 2 ஆயிரம் முதல் 20 ஆயிரம் கோழிகள் வரை வளர்க்கப்பட்டு வருகின்றன. பெரும்பாலான கோழிகள் உள்ளூர் தேவைக்காகவே பயன்படுத்தப்படுகின்றன.

  பறவைக்காய்ச்சல் தொடர்பாக பண்ணையாளர்களை அழைத்து அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து அவர்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

  பறவைக்காய்ச்சல் என்பது கோழிக்கு மட்டுமல்ல வாத்து உள்பட அனைத்துப் பறவைகளையும் தாக்கும் இன்புளுன்சா வைரஸ் ஆகும். இது பறவைகளிடமிருந்து பன்றிக்கும் பின்னர் பன்றியிலிருந்து மனிதருக்கும் காற்றின் மூலமாக பரவும் தன்மை கொண்டது.

  எனவே, முன்னெச்சரிக்கை நடவடிக்கையில் தீவிரம் காட்டி வருகிறோம்.

  பண்ணை வைத்திருப்போரும், வீட்டில் கோழி வளர்ப்போரும் கோழி வளர்க்கும் இடத்தைச் சுற்றிலும் சுண்ணாம்பு மற்றும் பிளிச்சிங் பவுடரை தெளித்து வந்தாலே போதுமானது.

  பறவைக்காய்ச்சலை பொறுத்தவரையில் எந்த அறிகுறியும் தோன்றாது. நோய் தாக்கிய 3 மணி நேரத்திலிருந்து 6 மணி நேரத்திற்குள் மொத்தமாக பறவைகள் இறந்துவிடும்.

  தற்போது பச்சாங்குப்பத்தில் இறந்த கோழிகள் இயற்கையான முறையில் இறந்து இப்பகுதியில் வீசப்பட்டவைதான். பறவைக்காய்ச்சலுக்கான அறிகுறி இல்லை என்றார்.

  மேலும், ஒவ்வொரு சனிக்கிழமையும் கால்நடைத் துறையின் கட்டுப்பாட்டில் உள்ள மருந்தகங்களில் பறவைகளுக்கு தடுப்பூசி போடப்படுகிறது. பொதுமக்கள் இதனை பயன்படுத்திக்கொள்ள வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai