சுடச்சுட

  

  நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு இரங்கல்

  By விருத்தாசலம்  |   Published on : 06th December 2014 03:49 AM  |   அ+அ அ-   |   எங்களது தினமணி யுடியூப் சேனலில், சமீபத்திய செய்தி மற்றும் நிகழ்வுகளின் வீடியோக்களைப் பார்க்க, சப்ஸ்கிரைப் செய்ய இங்கே கிளிக் செய்யுங்கள்!

  மறைந்த நீதிபதி கிருஷ்ணய்யருக்கு விருத்தாசலத்தில் கம்யூனிஸ்ட் மற்றும் எழுத்தாளர்கள் அமைப்பு சார்பில் வெள்ளிக்கிழமை அஞ்சலிக் கூட்டம் நடைபெற்றது.

  நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யர் மறைவையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சார்பில், விருத்தாசலம் பாலக்கரை, திலீபன் சதுக்கத்தில் நினைவேந்தல் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில், கட்சியின் வட்டச் செயலர் அசோகன், வட்டக்குழு உறுப்பினர்கள் சந்திரசேகரன், சிவஞானம், குமரகுரு, அமிர்தலிங்கம், வழக்குரைஞர் சங்கத் தலைவர் சங்கரய்யா, வாலிபர் சங்க நிர்வாகிகள் கலைச்செல்வன், நெல்சன், ராயர், கர்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  விடுதலைச் சிறுத்தைகள் கட்சி: விடுதலைச் சிறுத்தைகள் கட்சி சார்பில், மாநில கருத்தியல் பரப்பு துணைச் செயலர் திருமாறன், நகர அமைப்பாளர் மருதையன் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.

  எழுத்தாளர்கள் கூட்டமைப்பு: திருமுதுகுன்றம் எழுத்தாளர்கள் கூட்டமைப்பு சார்பில் நடந்த நிகழ்ச்சியில் கூட்டமைப்புத் தலைவர் கவிஞர்கள் கரிகாலன், அமிர்தராஜ், ஹபீப்ரஹ்மான், மாதவன் அதிகன், வீரமணி உள்பட பலர் கலந்துகொண்டனர்.

  தமிழ்த் தேசியப் பேரியக்கம்: இவ்வியக்கத்தின் தலைவர் பெ.மணியரசன் வெளியிட்டுள்ள அறிக்கை: நீதிபதி வி.ஆர்.கிருஷ்ணய்யரின் மறைவுக்கு தமிழ்த் தேசியப் பேரியக்கம் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துக் கொள்கிறது. இந்திய நீதித் துறை வரலாற்றில் அணையா விளக்காக என்றும் திசைகாட்டும் தீர்ப்புகளை வழங்கியவர் முன்னாள் உச்ச நீதிமன்ற நீதிபதி வி.ஆர். கிருஷ்ணய்யர்.

  ஒடுக்கப்பட்ட மக்களுக்கான இடஒதுக்கீட்டில், பதவி உயர்வில் இடஒதுக்கீடு கூடாது என்ற வழக்கில் பதவி உயர்வுகளிலும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு இடஒதுக்கீடு வழங்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கினார்.

  அத்தீர்ப்பில் சாதிய ஒடுக்குமுறை, தீண்டாமைக் கொடுமை ஆகியவற்றின் சமூக இருப்புகளை விரிவாக விவாதித்து அவற்றைப் போக்குவதற்கான கருத்துகளையும் வழங்கினார்.

  மரண தண்டனை கூடாது என்று அவர் தீர்ப்புரைகளில் கூறியுள்ளார்.

  மரண தண்டனையை நிறைவேற்றுவதற்கான தூக்கு மரத்தில் ஒருவர் தொங்கவிடப்படும் பொழுதெல்லாம் இந்திய அரசுக் கொடி அரைக்கம்பத்தில் பறக்கிறது என்றார் அவர்.

  பணி ஓய்வுக்குப் பிறகு மனித உரிமைக் களத்தில் குறிப்பாக மரண தண்டனைக்கு எதிரான இயக்கங்களில் அவர் பங்கு கொண்டார். ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட மூவருக்கும் தூக்குத் தண்டனையை நிறைவேற்றக் கூடாது என்று வலியுறுத்தி வந்தார்.

  இளம் வழக்குரைஞர்களுக்கும், மனித உரிமைப் போராளிகளுக்கும் வழிகாட்டும் நீதித்துறை வல்லுநராகவும், மனித உரிமைப் போராளியாகவும் வி.ஆர். கிருஷ்ணய்யர் விளங்குவார் என அவர் தெரிவித்துள்ளார்.

  அண்ணாமலைப் பல்கலை. முன்னாள் மாணவர் சங்கம்: நீதியரசர் வி.ஆர்.கிருஷ்ணய்யர் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 1933-35 ஆண்டுகளில் பி.ஏ. பொருளாதாரம் மற்றும் ஆங்கிலப் பட்டப்படிப்பு பயின்றார். நீதித் துறை, கல்வித் துறை, அரசியல், சமுதாயம் என பல்வேறு தளங்களில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை செய்துள்ளார்.

  பத்மபூஷன் விருதினை பெற்று, நூற்றாண்டு கண்ட பெருமைக்குரியவர் வி.ஆர்.கிருஷ்ணய்யர். அவரது மறைவுக்கு அண்ணாமலைப் பல்கலைக்கழக முன்னாள் மாணவர் சங்கம் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துக் கொள்கிறது என அதன் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

  1979-ல் நடைபெற்ற அண்ணாமலைப் பல்கலைக்கழக பொன்விழாவில் வி.ஆர்.கிருஷ்ணய்யருக்கு கௌரவ டாக்டர் பட்டம் அளிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

  • அதிகம்
   படிக்கப்பட்டவை
  • அதிகம் இ-மெயில் செய்யப்பட்டவை
  google_play app_store
  kattana sevai